Published : 27 Apr 2024 08:13 PM
Last Updated : 27 Apr 2024 08:13 PM
சென்னை: 1976-ம் ஆண்டு தமிழ்நாடு பொது வளாகங்கள் (அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுதல்) சட்டத்தின் கீழ் வக்பு வாரிய சொத்துகளை கொண்டு வந்த தமிழக அரசின் சட்டத் திருத்தம் அரசியலமைப்புக்கு முரணானது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், வக்பு வாரிய தலைமை நிர்வாக அதிகாரிக்கு ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற அதிகாரம் அளித்தும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில், "2010ம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தால் செய்யப்பட்ட திருத்தம், மத்திய சட்டமான 1995ம் ஆண்டு வக்பு சட்டத்துக்கு எதிரானது. 2013ம் ஆண்டு மத்திய சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தின்படி அமைக்கப்பட்ட வக்பு தீர்ப்பாயங்கள் மூலம் மட்டுமே வக்பு சொத்துகளை ஆக்கிரமிப்பவர்களை அகற்ற முடியும்" என்று தெரிவித்தனர்.
மேலும், "வக்பு சட்டம், 1995-ன் அசல் விதிகள் வக்பு சொத்துகளின் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை கையாளும் அளவுக்கு கடுமையாக இல்லை. எனவேதான், பொது வளாகங்கள் (அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுதல்) சட்டம், 1971-ஐ வக்பு சொத்து விவகாரங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்று சச்சார் கமிட்டி பரிந்துரைத்தது. ஏனென்றால், வக்பு சொத்துக்கள் பொதுமக்களின் நலனுக்காகவும் இருந்தன.
இந்தப் பரிந்துரையைத் தொடர்ந்து தமிழக அரசு இதில் 2010ம் ஆண்டு திருத்தம் கொண்டு வந்தாலும், பல மாநிலங்கள் திருத்தங்கள் செய்யவில்லை. ஆகவே தான் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் நாடு முழுவதும் ஒரே நடைமுறை நிலவும் வகையில் மத்திய அரசு வக்பு சட்டத்தில் 2013ம் ஆண்டும் திருத்தம் கொண்டு வந்தது. இந்த திருத்தம், மத்திய சட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளின்படி மட்டுமே வக்பு சொத்துக்களை ஆக்கிரமிப்பவர்களை வெளியேற்ற முடியும் என்று தெளிவாகக் கூறுகிறது.
தமிழக அரசின் சட்டத்திருத்ததுக்கு பிறகே மத்திய அரசு சட்டத்திருத்தம் செய்தது என்றால், அதன்பொருள் தமிழக அரசின் சட்டத்திருத்தத்தை மத்திய அரசு நன்கு அறிந்திருந்தது என்பதே. எனினும், மத்திய அரசு சட்டத் திருத்தம் செய்தது என்றால், ஆக்கிரமிப்புகளை மீட்பது தொடர்பாக பயனுள்ள வழிமுறைகளை வழங்க வேண்டும் என்ற மத்திய அரசு விரும்பியதால் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. மத்திய அரசின் சட்டத்திருத்தம் வக்பு சொத்துகளைப் பாதுகாக்க வேண்டும் என்று நோக்கத்தை கொண்டிருக்கிறது" என்று தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
முன்னதாக இந்த வழக்கில், "2010ல் மேற்கொள்ளப்பட்ட தமிழக அரசின் சட்டத் திருத்தமானது அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின் பட்டியல் III (இணைப்பட்டியல்) இன் கீழ் அதிகாரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் கொண்டுவரப்பட்டது. எனவே, மத்திய சட்டத்துக்கு எதிரான இந்த திருத்தத்தின் மதிப்பீட்டைக் கருத்தில் கொண்டு, அதற்கு ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும்" என்ற வழக்கறிஞர்கள் வி. ராகவாச்சாரி மற்றும் எஸ்.ஆர்.ரகுநாதன் ஆகியோரின் வாதத்தை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். அதேநேரம், "மாநில சட்டமும், மத்திய சட்டமும் இணைந்து செயல்படலாம்" என்று தமிழக அரசின் வாதத்தை ஏற்க மறுத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT