Published : 27 Apr 2024 03:45 PM
Last Updated : 27 Apr 2024 03:45 PM
சென்னை: “தமிழக மக்கள் மீதோ, தமிழக வாழ்வாதாரத்தின் மீதோ கொஞ்சம் கூட கருணை காட்டாத அணுகுமுறையை தான் பிரதமர் மோடி கையாண்டு வருகிறார் என்பதற்கு உள்துறை அமைச்சகத்தின் நிதி ஒதுக்கீடு மேலும் உறுதி செய்கிறது” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சனம் செய்துள்ளார். மேலும், “தேசிய பேரிடர் நிவாரண நிதியில் நாம் கேட்ட தொகையை ஒதுக்க மத்திய பாஜக அரசு மறுத்தது தெளிவாகத் தெரிகிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் அனைத்து நிலைகளிலும் நிதி ஒதுக்குவதில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டு வருகிறது. தென் மாநிலங்களிடையே குறிப்பாக தமிழகத்துக்கு கடுமையாக பாரபட்சத்துடன் நிதி ஒதுக்கப்பட்டு வருவதை எதிர்த்து கடுமையான கண்டனங்களை வெளிப்படுத்தியிருக்கிறோம்.
கடந்த டிசம்பர் 2023-இல் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கடுமையான வெள்ள பாதிப்புக்கு தேசிய பேரிடர் நிவாண நிதியிலிருந்து ரூபாய் 38,000 கோடி நிதி ஒதுக்க தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் கடந்த ஜனவரி மாதம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்கள்.
மத்திய குழு அறிக்கை வந்ததும் சில நாட்களில் நிதி ஒதுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் கூறினார். ஆனால், அவர் கூறியபடி நிதி ஒதுக்கப்படவில்லை. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பிறகு தேசிய பேரிடராக இதனை அறிவிக்க முடியாது என்று கூறியது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமைந்தது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூபாய் 115.49 கோடியும், டிசம்பர் வெள்ள நிவாரண நிதியாக ரூபாய் 160.61 கோடியும் ஆக மொத்தம் ரூபாய் 276.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால், தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட மொத்த தொகை ரூபாய் 682.63 கோடி. இதில் மாநில பேரிடர் நிவாரண நிதியில் உள்ள இருப்பு தொகையான ரூபாய் 406.57 கோடியை கழித்தது போக மீதியுள்ள தொகையான ரூபாய் 276.10 கோடி தான் தற்போது தமிழகத்துக்கு உள்துறை அமைச்சகம் ஒதுக்கியுள்ளது.
நாம் கேட்ட நிவாரண நிதி ரூபாய் 38,000 கோடி. ஆனால், மாநில பேரிடர் நிவாரண நிதியில் ஏற்கெனவே இருந்த 406.57 கோடியை விடுவித்து மீதியுள்ள ரூபாய் 276.10 கோடியை தான் தமிழகத்துக்கு நிவாரண நிதியாக மத்திய அரசு வழங்கியுள்ளது.
தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிதியை ஒதுக்காமல் மாநில பேரிடர் நிவாரண நிதியாக ஏற்கெனவே இருக்கிற தொகையை கழித்து விட்டு மீதி தொகையை உள்துறை அமைச்சகம் ஒதுக்கியிருப்பது மத்திய பாஜக அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது. இதன்மூலம் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் நாம் கேட்ட தொகையை ஒதுக்க மத்திய பாஜக அரசு மறுத்தது தெளிவாகத் தெரிகிறது.
இந்த ஒதுக்கீடு யானைப் பசிக்கு சோளப் பொரி போட்டது போல் இருக்கிறது. எனவே, தமிழகத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய நிவாரண நிதி வழங்காத பிரதமர் மோடி தமிழக மக்களுக்காக பேசுவது அப்பட்டமாக நீலிக் கண்ணீர் வடிப்பதாகத் தான் கருத முடியும்.
தமிழக மக்கள் மீதோ, தமிழக வாழ்வாதாரத்தின் மீதோ கொஞ்சம் கூட கருணை காட்டாத அணுகுமுறையை தான் பிரதமர் மோடி கையாண்டு வருகிறார் என்பதற்கு உள்துறை அமைச்சகத்தின் நிதி ஒதுக்கீடு மேலும் உறுதி செய்கிறது. இத்தகைய வஞ்சிக்கிற மத்திய பாஜக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment