Published : 27 Apr 2024 04:25 AM
Last Updated : 27 Apr 2024 04:25 AM

சுதந்திர தின அருங்காட்சியகத்துக்கு பழங்கால பொருட்களை பொதுமக்கள் வழங்கலாம்: அருங்காட்சியகங்கள் துறை

சென்னை: சென்னை ஹுமாயூன் மஹாலில் அமைய உள்ள சுதந்திர தின அருங்காட்சியகத்துக்கு, சுதந்திர போராட்டம் தொடர்பான பழங்கால பொருட்களை பொதுமக்கள் நன்கொடையாக வழங்குமாறு அருங்காட்சியகங்கள் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அருங்காட்சியகங்கள் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் தமிழர்களின் பங்கு மகத்தானது. அதில், தமிழகத்தின் தியாகம், பங்களிப்பை போற்றும் வகையில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று 75-வது சுதந்திர தின விழா உரையில் முதல்வர் அறிவித்தார்.

அதன்படி, சென்னை மெரினா கடற்கரை எதிரே உள்ள பாரம்பரியமிக்க ஹுமாயூன் மஹால் கட்டிடத்தில் சுமார் 80,000 சதுரஅடி பரப்பில்பெரிய அளவில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. அதற்கு, அனைத்து தரப்பு மக்களின் பங்களிப்பும் தேவைப்படுகிறது.

எனவே, சுதந்திர போராட்டம்தொடர்பாக தங்களிடம் உள்ள பழங்கால ஆவணங்கள், கையெழுத்து பிரதி, செய்தித்தாள், ஜெயில் வில்லை, ராட்டை, பட்டயங்கள், ஐஎன்ஏ சீருடை, ஐஎன்ஏ அஞ்சல்தலை, ரூபாய் நோட்டு போன்றவற்றை பொதுமக்கள் நன்கொடையாக அளிக்கலாம். சென்னை அல்லது 23 மாவட்ட அருங்காட்சியகங்களுக்கு நேரில் சென்று அவற்றை வழங்கலாம்.

இவ்வாறு வழங்கப்படும் பொருட்களுக்கு அருங்காட்சியக ஆணையரால் ஒப்புகை கடிதம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். மக்கள் பார்வைக்கு இவை வைக்கப்படும்போது, அதை வழங்கியவரின் பெயரும் இடம்பெறும்.

எனவே, சுதந்திர போராட்டம் தொடர்பாக தங்களிடம் உள்ள அரிய பொருட்களை, அமையவுள்ள வரலாற்று சிறப்புமிக்க அருங்காட்சியகத்துக்கு மக்கள் நன்கொடையாக வழங்குமாறு வேண்டுகிறோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x