Published : 27 Apr 2024 06:10 AM
Last Updated : 27 Apr 2024 06:10 AM
கோவை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டது தொடர்பாக, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 2024-ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 2023 அக்டோபர் 27-ம் தேதி அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. அதன்படி, கோவை மாவட்டத்தில் அமைந்த பத்து சட்டப்பேரவை தொகுதிகளுக்கான மொத்த வாக்காளர் எண்ணிக்கை 30,49,004 ஆகும்.
பின்னர் நடைபெற்ற சிறப்பு சுருக்கமுறை திருத்த காலத்தில், வாக்காளர்களிடமிருந்து பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தல் உள்ளிட்ட காரணங்களுக் காகவும், அரசியல் கட்சிகள் மூலமாக நியமனம் செய்யப்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் மூலமாகவும் உரிய படிவங்கள் பெறப்பட்டு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குறைகளை தெரிவிக்க வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கம் செய்யப்பட்ட பெயர்கள் குறித்து ஆட்சேபனை ஏதும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரால் தெரிவிக்கப்படவில்லை. எனவே, பெறப்பட்ட விவரங்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களின் தகவல் பலகையில் பிரசுரம் செய்யப்பட்டும், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டும் பொதுமக்களின் பரிசீலனைக்காக வெளியிடப்பட்டது.
இதையடுத்து, வாக்காளர் இறுதி பட்டியல் 2024 ஜனவரியில் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில், கோவை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தெற்கு மற்றும் சிங்காநல்லுார் ஆகிய ஐந்து சட்டப்பேரவை தொகுதிகளுக்கான மொத்த வாக்காளர் எண்ணிக்கை 16,71,003 ஆகும். இதில், 28,364 (இறப்பு-6181, நிரந்தர குடிபெயர்வு – 18934, இரட்டைப் பதிவு - 3249) வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
மேற்படி விவரங்களை சரிபார்த்து, கருத்துக்களைத் தெரிவிக்கும் வகையில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கும், தலா இரண்டு அச்சிடப்பட்ட பிரதிகள் வீதம் வழங்கப்பட்டன.
இப்பட்டியலில் கண்டுள்ள பெயர் நீக்கம் தொடர்பான ஆட்சேபனை ஏதும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரால் தெரிவிக்கப்படவில்லை. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு 10 நாட்கள் முன்பு வரை, பெயர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
2024 மார்ச் 27-ம் தேதி வெளியிடப்பட்ட தொடர் திருத்த வாக்காளர் பட்டியலில், கோவை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தெற்கு மற்றும் சிங்காநல்லுார் ஆகிய ஐந்து சட்டப்பேரவை தொகுதிகளுக்கான மொத்த வாக்காளர் எண்ணிக்கை 17,08,369 ஆகும். இதில், 26,504 வாக்காளர்கள் புதியதாக சேர்க்கப்பட்டும், 8,333 (இறப்பு-1090, நிரந்தர குடிபெயர்வு - 6998, இரட்டைப் பதிவு - 245) வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டும் உள்ளனர்.
மேலும், வாக்காளர் இறுதி பட்டியலின் படி, திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட பல்லடம் சட்டமன்றத் தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 3,97,755. இவற்றுடன் சேர்த்து கோவை மக்களவை தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 21,06,124 ஆகும். பொதுமக்கள் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் உள்ளிட்ட மனுக்களை ஆன்லைன் மூலமாகவும், நேரிலும் சமர்ப்பிக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT