Last Updated : 27 Apr, 2024 05:40 AM

 

Published : 27 Apr 2024 05:40 AM
Last Updated : 27 Apr 2024 05:40 AM

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி எதிரே மேம்பாலம் கட்டும் பணியை விரைவுபடுத்த வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி எதிரே அச்சத்துடன் சாலையைக் கடக்கும் பொதுமக்கள்.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி எதிரே மேம்பாலம் அமைக்க சர்வே முடிந்த நிலையில், மேம்பால கட்டுமான பணிகள் தொய்வாக நடைபெற்று வருவதாகவும், நாள்தோறும் பொது மக்கள் அச்சத்துடன் சாலையை கடந்து செல்வதாகவும் வேதனை தெரிவித் துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போலுப்பள்ளி, கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைந்துள்ளது. மருத்துவமனைக்கு நாள்தோறும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். அதே போல், அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியர், மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட ஆயிரத்திற்கும் அதிக மானவர்கள் வந்து செல்கின்றனர்.

ரூ.25.8 கோடியில் பாலம்: இந்நிலையில், தேசிய நெடுஞ் சாலையையொட்டி அமைந்துள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் மேம்பாலம் அமைக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் தேசிய நெடுஞ்சாலைத்துறை, அரசு மருத்துவக்கல்லூரி எதிரே, 750 மீட்டர் நீளத்திற்கு, ரூ.25.8 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்க ஒப்பந்தம் போட்டது. மேலும் மேம்பாலம் கட்டும் பணி 565 நாட்களில் முடியும் எனவும் தெரிவித்தது.

பணி தொடங்கவில்லை: இந்நிலையில் கடந்த 2023, பிப்ரவரி மாதம் அரசு மருத்துவக்கல்லூரி எதிரே மேம்பாலம் அமையவுள்ள இடத்தை அளவீடு செய்யும் பணி நடந்தது. தொடர்ந்து இப்பகுதியில் மேம்பாலம் அமையவுள்ள இடத்திற்கு பக்கவாட்டில் சர்வீஸ் சாலை அமைக்கும் பணி தொடங்கியது.

இப்பணிகள் தற்போது வரை முழுமை பெறாமலும், மேம்பாலம் கட்டும் பணிகள் தாமதமாக தொடங்கி, தொய்வாக பணிகள் நடக்கிறது. இதனால் அரசு மருத்துவ மனைக்கு வரும் நோயாளிகள், பொதுமக்கள் உட்பட அனைவரும் அச்சத்துடன் சாலையை கடந்து வருகின்றனர்.

அதிவேகமும், விபத்துகளும்: இதுகுறித்து குருபரப் பள்ளியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் கூறும் போது, மருத்துவமனை எதிரே மேம்பாலம் கட்டும் பணி மிகவும் மெதுவாக நடைபெற்று வருகிறது.

இவ்வழியே தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் சாலையை கடந்து செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி, உயிரிழக்கும் சம்பவங்கள் நடைபெறுகிறது. மேம்பாலம் கட்டுமானப் பணி முடியும் வரையில், இச்சாலையில் பேரிகார்டு வைத்து, குறைவான வேகத்தில் வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

இருபுறமும் நிழற்கூடம்: கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், அரசு மருத்துவக்கல்லூரிக்கு சிகிச்சைக்கு வரும் வெளிநோயாளிகள் பேருந்துக்காக சாலையின் இருபுறங்களில் காத்திருக்கும் நிலை காணப்படுகிறது. எனவே, சாலையின் இருபுறங்களிலும் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x