Published : 14 Aug 2014 01:06 PM
Last Updated : 14 Aug 2014 01:06 PM

இந்திய மக்கள் துன்பங்களில் இருந்து விடுதலை பெறவேண்டும்: விஜயகாந்த் சுதந்திர தின வாழ்த்து

நம் நாட்டில் மாற்றங்கள் ஏற்பட்டு, இந்திய நாடு வளம் பெற வேண்டும் என்றும், இந்திய மக்கள் துன்பங்களில் இருந்து விடுதலை பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர தினத்தையொட்டி, அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், "ஆங்கிலேயரிடம் இருந்து இந்தியா சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் ஆகின்றன. தற்பொழுது 68-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது. உலக நாடுகளில் இந்தியா முதன்மை நாடாக மாறவேண்டும் என்பதே இந்திய மக்களின் எதிர்பார்ப்பு ஆகும். ஆனால், இன்று இந்தியா முன்னேறுவதற்கு பல தடைகள் உருவாகியுள்ளன. பொருளாதாரம், வேளாண்மை, தொழிற்துறைய என அனைத்திலும் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் ஏற்படாமல் வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறது. மேலும் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

ஒரு புறத்தில் அண்டை நாடுகள் இந்தியாவை அச்சுறுத்தல் மற்றும் பல்வேறு பிரச்சனைகள் மூலம் இணக்கமான சூழ்நிலை ஏற்படாத அளவிற்கு கொண்டுசெல்கின்றன. மறுபுறம் உள்நாட்டில் மதம், இனம், மொழி, சாதி பிரச்சனைகள் மூலம் இணக்கமான சூழ்நிலை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் விலைவாசி உயர்வு, வேலை இல்லா திண்டாட்டம் காரணமாகவும், ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருவதாலும் மக்கள் வாழ்க்கையையே சுமையாக கருதும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் நம் நாட்டில் மாற்றங்கள் ஏற்பட்டு, இந்திய நாடு வளம் பெற வேண்டும். இந்திய மக்கள் துன்பங்களில் இருந்து விடுதலை பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்.

இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக பல்வேறு தலைவர்கள் உயிரையும், ரத்தத்தையும் கொடுத்து தங்களின் வீரத்தாலும், விவேகத்தாலும் நமக்கு சுதந்திரம் பெற்றுக்கொடுத்தனர். அந்தச் சுதந்திரத்தை பேணிக்காத்திட நாம் சூளுரை ஏற்போம்.

இந்த இனிய நன்நாளில் சுதந்திரம் பெற்றுக்கொடுத்த தலைவர்களின் வழியில் சென்று எதிர்வரும் காலங்களில் நாட்டில் அமைதியும், முன்னேற்றமும் அனைத்து மக்களுக்கும் ஏற்படவும், வறுமை ஒழியவும், இந்த சுதந்திர திருநாள் வழிவகுக்கட்டும் என தேமுதிக சார்பில் எனது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x