Published : 26 Apr 2024 08:29 PM
Last Updated : 26 Apr 2024 08:29 PM

செய்தித் தெறிப்புகள் @ ஏப்.26: செறிவூட்டப்பட்ட அரிசி விவகாரம் முதல் விவிபாட் வழக்கு தீர்ப்பு வரை

88 தொகுதிகளில் அமைதியாக நடந்த வாக்குப்பதிவு: மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் 12 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை அமைதியான முறையில் நடந்தது. கேரளா - 20 , கர்நாடகா- 14, ராஜஸ்தான் - 13, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் - தலா 8, மத்திய பிரதேசம் - 6,பிஹார், அசாம் - தலா 5, மேற்கு வங்கம், சத்தீஸ்கர் - தலா 3, ஜம்மு-காஷ்மீர், திரிபுரா, மணிப்பூரில் தலா ஒரு தொகுதி என ஒட்டுமொத்தமாக 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

கேரளாவில் வாக்குப்பதிவு: வெயிலுக்கு 5 பேர் பலி: கேரளாவில் வெள்ளிக்கிழமை நடந்த மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவின்போது, கடும் வெயில் காரணமாக நான்கு வாக்காளர்களும், கோழிக்கோட்டில் ஒரு வாக்குச்சாவடி முகவரும் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செறிவூட்டப்பட்ட அரிசி: மத்திய அரசுக்கு ஐகோர்ட் கேள்வி: பாராட்டத்தக்க நடவடிக்கை என்றாலும் கூட, எந்த அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத் திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்? என்று கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இந்த அரிசியை உண்ணக் கூடாதவர்களை எப்படி கண்காணிக்கப் போகிறீர்கள் என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

குடிநீர் தொட்டியில் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்: "புதுக்கோட்டை மாவட்டம் சங்கம் விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலந்தது கண்டிக்கத்தக்கது. பட்டியலினத்தோருக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுப்பதில் தமிழக அரசு தொடர்ந்து படுதோல்வி அடைந்து வருகிறது" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

நிர்மலா தேவி வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்த பேராசிரியை நிர்மலா தேவி வழக்கின் தீர்ப்பை ஏப்ரல் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

“மேடையில் கண்ணீர் விடுவார் மோடி” - ராகுல் காந்தி: “சமீப நாட்களில் மோடி உரை நிகழ்த்தும்போது மிகவும் பதற்றத்துடன் காணப்படுகிறார். இன்னும் சில நாட்களில் அவர் மேடையில் கண்ணீர் கூட விடக்கூடும். கடந்த 10 ஆண்டுகளில் நரேந்திர மோடி ஏழைகளிடம் இருந்து பணத்தை மட்டுமே பறித்துள்ளார்” என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

“மம்தா அரசால் 26,000 குடும்பங்கள் வேலை இழப்பு” - மோடி: “சமரச அரசியலுக்காகவும், வாக்கு வங்கிக்காகவும் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் முதலான கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன” என பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்க மாநிலம், வடக்கு மால்டாவில் நடந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, “இளைஞர்களின் எதிர்காலத்தில் திரிணமூல் காங்கிரஸ் விளையாடி வருகிறது. 26 ஆயிரம் குடும்பங்கள் வேலை இழந்துள்ளன ” என்று பிரதமர் மோடி பேசினார்.

இண்டியா கூட்டணி: சரத் பவார் கருத்து: “சொத்துகள் மறுபங்கீடு தொடர்பான விவாதங்கள் எல்லாம் ஒட்டுமொத்த முட்டாள்தனம். மாறாக, சாதிவாரி கணக்கெடுப்பே தேவை. அதைப்பற்றியே இப்போது விவாதிக்க வேண்டும். நாடாளுமன்ற ஜனநாயகத்தை நாம் பாதுகாக்க வேண்டுமென்றால், இண்டியா கூட்டணிக் கட்சிகள் ஜூன் 4-ஆம் தேதிக்குப் பின்னரும் வேற்றுமைகளை ஒதுக்கிவைத்துவிட்டு ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

விவிபாட் ஒப்புகை சீட்டை 100% எண்ணக் கோரும் வழக்கு தள்ளுபடி: விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட வேண்டும் என்று கோரி ஜனநாயக சீர்திருத்த சங்கம் மற்றும் அபய் பக்சந்த், அருண் குமார் அகர்வால் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரும் மனுக்கள் அனைத்தையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும், உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், “பழைய வாக்குச் சீட்டு முறைக்கு மீண்டும் செல்ல முடியாது. தற்போதைய நடைமுறையே சரியாக தான் உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை” என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபாட் தொழில்நுட்பம், வழிமுறைகள் குறித்து விரிவான விசாரணை மற்றும் ஆலோசனை நடத்தினோம். மின்னணு வாக்குப்பதிவு மற்றும் விவிபாட் இயந்திரங்களின் நம்பகத் தன்மையை பல்வேறு கட்டங்களில் உறுதி செய்தோம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ள பிரதமர் மோடி, “எதிர்க்கட்சிகளின் முகத்தில் பலமாக அறை விட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கவில் இந்திய வம்சாவளி மாணவி கைது: அமெரிக்காவின் பிரபலமான பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் இந்திய வம்சாவளி மாணவி ஒருவர், இஸ்ரேல் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட அசிந்தியா சிவலிங்கன் என்பது குறிப்பிடத்தக்கது.

“நெருக்கடி கொடுத்தால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம்”: “எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷனை உடைக்க மத்திய அரசு எங்களை கட்டாயப் படுத்தினால் இந்தியாவை விட்டு வெளியேற நேரிடும்” என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: தேர்தல் பறக்கும் படையினரால் தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி காவல் துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் சுதந்திர தின அருங்காட்சியகம்: சென்னை மெரினா கடற்கரையின் எதிரில், பாரம்பரியக் கட்டடமான ஹுமாயூன் மஹால் கட்டடத்தில் சுமார் 80,000 சதுர அடி பரப்பளவில் பெரிய அளவில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது. இதற்கு, பொதுமக்கள் தங்கள் வசம் உள்ள அரிய பொருட்களை சென்னை அல்லது 23 மாவட்ட அருங்காட்சியகங்களுக்கு நேரிடையாக வந்து வழங்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நிதி நெருக்கடியில் ‘கூ’ நிறுவனம்: மைக்ரோ பிளாக்கிங் ஸ்டார்ட் அப் நிறுவனமான ‘கூ’ (Koo) நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால், அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் சம்பளம் வழங்குவதை நிலுவையில் வைத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x