Published : 26 Apr 2024 06:52 PM
Last Updated : 26 Apr 2024 06:52 PM

சென்னையில் சுதந்திர தின அருங்காட்சியகம்: அரிய பொருட்களை வழங்க பொது மக்களுக்கு அரசு அழைப்பு

சென்னை: சென்னை மெரினா கடற்கரையின் எதிரில், பாரம்பரியக் கட்டடமான ஹுமாயூன் மஹால் கட்டடத்தில் சுமார் 80,000 சதுர அடி பரப்பளவில் பெரிய அளவில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது. இதற்கு, பொதுமக்கள் தங்கள் வசம் உள்ள அரிய பொருட்களை சென்னை அல்லது 23 மாவட்ட அருங்காட்சியகங்களுக்கு நேரிடையாக வந்து வழங்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அருங்காட்சியகங்கள் துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு மகத்தானது. விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் தியாகத்தையும் பங்களிப்பையும் போற்றும் வகையில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 75 வது சுதந்திர தினவிழா உரையின் போது அறிவித்துள்ளார்.

சென்னை மெரினா கடற்கரையின் எதிரில், பாரம்பரியக் கட்டடமான ஹுமாயூன் மஹால் கட்டடத்தில் சுமார் 80,000 சதுர அடி பரப்பளவில் பெரிய அளவில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது. இந்த அருங்காட்சியகம் சிறப்பாக அமைந்திட அனைத்து தரப்பு மக்களின் பங்களிப்பும் தேவைப்படுகிறது.

பொது மக்கள் தங்கள் வசம் உள்ள சுதந்திரப் போராட்டம் குறித்த பழங்கால ஆவணங்கள், கையெழுத்துப் பிரதிகள், செய்தித்தாள்கள், ஜெயில் வில்லைகள், ராட்டைகள், பட்டயங்கள், ஐ.என்.ஏ சீருடைகள், ஐ.என்.ஏ. அஞ்சல் தலை மற்றும் ரூபாய் நோட்டுகள் போன்ற இனங்களை நன்கொடையாக அளிக்கலாம். தங்கள் வசம் உள்ள அரிய பொருட்களை சென்னை அல்லது 23 மாவட்ட அருங்காட்சியகங்களுக்கு நேரிடையாக சென்று வழங்கலாம்.

இவ்வாறு வழங்கப்படும் பொருட்களுக்கு உரிய ஒப்புகைக் கடிதம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அருங்காட்சியக ஆணையரால் வழங்கப்படும்.இவ்வாறான அரிய பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் போது அதை வழங்கியவர்களின் பெயர்களும் இடம்பெறும். ஆகவே, பொதுமக்கள் தங்களிடம் உள்ள சுதந்திரப் போராட்டம் தொடர்பான அரும்பொருட்கள் அமையவுள்ள வரலாற்று சிறப்பு மிக்க அருங்காட்சியகத்துக்கு நன்கொடையாக வழங்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x