Published : 26 Apr 2024 05:20 PM
Last Updated : 26 Apr 2024 05:20 PM
சென்னை: “எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், கடலூர் மாவட்டம் முருகன்குடியைச் சேர்ந்த கனிமொழி மணிமாறன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “நாடு முழுவதும், மக்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம் தமிழகத்தில் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் அமல்படுத்தப்பட உள்ளது. ரேஷன் கடைகள், பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டத்தின் கீழ் இந்த அரிசி வழங்கப்பட உள்ளது. உடல் நலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத் திட்டத்தை செயல்படுத்தத் தடை விதிக்க வேண்டும்” என்று மனுவில் கூறியிருந்தார்.
இதேபோல், “தலசீமியா, அமீனியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்கள் ஆலோசனைப்படி தான் செறிவூட்டப்பட்ட அரிசியை உண்ண வேண்டும். இந்த எச்சரிக்கை வாசகம் செறிவூட்டப்பட்ட அரிசி பையில் இடம்பெறாமல் விநியோகிக்கப்படுவதாக” கூறி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “அனைத்து ரேஷன் கடைகளின் முன்பும், தலசீமியா, அமீனியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்கள் ஆலோசனைப்படி தான் செறிவூட்டப்பட்ட அரிசியை உண்ண வேண்டும் என விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. எனவே, அரிசி பைகளில் எச்சரிக்கை வாசகம் இடம்பெறச் செய்யத் தேவையில்லை” என்று வாதிட்டார்.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ், “எந்தவிதமான அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுகிறது. நாடாளுமன்றத்திலும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், “இந்தத் திட்டம் பாராட்டத்தக்கதாக இருந்தாலும், எந்த அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத் திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என்று வினவினர். மேலும், இந்த அரிசியை உண்ணக் கூடாதவர்களை எப்படி கண்காணிக்கப் போகிறீர்கள் என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 19-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT