Last Updated : 26 Apr, 2024 03:52 PM

 

Published : 26 Apr 2024 03:52 PM
Last Updated : 26 Apr 2024 03:52 PM

2023-ல் மதுரை கிளையில் 75,000 வழக்குகளுக்கு தீர்வு: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பெருமிதம்

உயர் நீதிமன்ற கிளையில் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் நடத்திய பிரிவு உபச்சார விழாவில் தலைமை நீதிபதி கங்காபுர்வாலாவுக்கு வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் நினைவுப் பரிசு வழங்கினர்.

மதுரை: உயர் நீதிமன்ற மதுரை கிளை அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கங்கபுர்வாலாவுக்கு பிரிவு உபச்சார விழா நடத்தப்பட்டது. இதில் தலைமை நீதிபதிக்கு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

பின்னர் தலைமை நீதிபதி பேசியது: "பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு மதுரையில் உயர் நீதிமன்ற கிளை 2004-ல் தொடங்கப்பட்டது. மதுரையில் உயர் நீதிமன்ற கிளை தொடங்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறியுள்ளதா? மதுரை கிளையில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் வழக்காடிகளின் நம்பிக்கையை பெற்றுள்ளனரா என்ற கேள்விகள் எழுகின்றன. இந்தk கேள்விகளுக்கு பதில் 'ஆம்' என்பதே. மதுரை கிளையில் அதிக வழக்குகள் தாக்கலாகி வருகின்றன.

வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளனர். இந்த நம்பிக்கை காரணமாக மதுரை கிளையில் தாக்கலாகும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2023-ல் 71 ஆயிரம் வழக்குகள் தாக்கலானது. அந்த ஆண்டில் 75 ஆயிரம் வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற அமர்வு மதுரையில் அமையாவிட்டால் இங்கு தாக்கலாகும் 50 சதவீத வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கலாகும். இதனால் தென் மாவட்ட வழக்காடிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும். சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களை ஒப்பிடுகையில் மதுரைக் கிளை இளம் வழக்கறிஞர்கள் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும்.

சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதி, உயர் நீதிமன்ற நீதிபதிகளாகி யுள்ளனர். மதுரைக் கிளையின் பங்களிப்பது அந்த அளவுக்கு இல்லை. இதனால் மதுரைக் கிளையின் இளம் வழக்கறிஞர்கள் இன்னும் கடுமையாக உழைத்து நீதித்துறையில் உயர் நிலையை அடைய வேண்டும். இதை மதுரை கிளை வழக்கறிஞர்கள் நிறைவேற்றுவார்கள் என நம்புகிறேன்" என்று அவர் பேசினார்.

நிர்வாக நீதிபதி சுரேஷ்குமார், மகா சங்கத் தலைவர் ராமகிருஷ்ணன், எம்பிஏஏ சங்கத் தலைவர் எம்.கே.சுரேஷ், எம்பிஎச்ஏஏ சங்கத் தலைவர் ஆண்டிராஜ், பெண் வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஆனந்தவள்ளி, எம்எம்பிஏ சங்கத் தலைவர் அழகு ராம் ஜோதி, சங்கச் செயலாளர்கள் கார்த்தி, வெங்கடேசன், அன்பரசு, கிருஷ்ணவேணி, ஆயிரம் கே.செல்வகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x