Published : 25 Apr 2024 09:19 PM
Last Updated : 25 Apr 2024 09:19 PM
விருத்தாச்சலம்: விருத்தாசலத்தில் மது போதையில் சாலையின் குறுக்கே நின்றிருந்த இளைஞரை ஒதுங்கி நிற்குமாறு கூறிய நடத்துநரை சரமாரியாக தாக்கிய நபரைக் கண்டித்தும், காவல் துறையினரின் அலட்சியத்தைக் கண்டித்தும் போக்குவரத்து ஊழியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கத்தாழை கிராமத்தைச் சேர்ந்த வசந்தகுமார், அரசு பேருந்து தற்காலிக ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இன்று இவர் பணியில் இருந்தபோது, விருத்தாசலம் பேருந்து நிலையத்திலிருந்து கடலூர் செல்வதற்காக பேருந்து இயக்கிச் செல்லும் போது, சிதம்பரம் இணைப்புச் சாலையில், மது போதையில் இளைஞர் ஒருவர் போக்குவரத்துக்கு இடையூறாக நின்றுள்ளார்.
பேருந்து ஓட்டுநர் ஒலி எழுப்பியும், இளைஞர் அதே இடத்தில் நின்றதால், பேருந்து நடத்துநர் அருள்ராஜ் கீழே இறங்கி, ஏன் இப்படி செய்கிறாய், ஓரமாக நிற்க அறிவுறுத்தியிருக்கிறார். அதற்கு அந்த இளைஞர், நடத்துநர் அருள்ராஜை சரமாரியாக தாக்கியுள்ளார். இதைக் கண்ட பயணிகள், பேருந்திலிருந்து இறங்கி, அந்த இளைஞரை பிடித்து, விருத்தாசலம் காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். ஆனால் அந்த இளைஞரை போலீஸார் விடுவித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுநர், சக அரசுப் பேருந்து ஊழியர்களுக்கு தகவல் அளித்ததன் பேரில், தாக்கிய நபரைக் கைது செய்யக் கோரி பேருந்து ஊழியர்கள் விருத்தாசலத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் ஒரு மணிநேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து விருத்தாசலம் வட்டாட்சியர் உதயக்குமார் மற்றும் காவல்துறையினர் பேருந்து ஊழியர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, மதுபோதையில் உள்ள இளைஞரை கைது செய்கிறோம் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து, அரசுப் பேருந்து ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணியை தொடர்ந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT