Published : 25 Apr 2024 06:59 PM
Last Updated : 25 Apr 2024 06:59 PM
விழுப்புரம்: “தமிழகத்தில் பாஜக கூட்டணி எங்கள் கணிப்பில் 15 தொகுதிகளில் வெற்றி பெறும்” என்று பாஜக மாநிலத் துணைத் தலைவர் ஏ.ஜி.சம்பத் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில், கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் ஏ.ஜி.சம்பத் இன்று மாலை செய்தியாளர்களிடம் கூறியது: ''மத்தியில் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறி வந்த காங்கிரஸ் கட்சி, இப்போது அதன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு சமூக, பொருளாதார, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அதன் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருக்கிறது.
காங்கிரஸ் கட்சி அறிவித்திருக்கும் சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு என்பது எந்தவிதமான சட்ட அங்கீகாரமும் இல்லாத புள்ளிவிவரங்களைத் திரட்டும் நடைமுறை ஆகும். இந்த முறையில் திரட்டப்படும் புள்ளிவிவரங்கள் துல்லியமாக இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.
மணிப்பூரை வாய்கிழிய பேசுகிறார் ராகுல் காந்தி. மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு தொல்லை கொடுத்த சந்தோஷ்காளியில் நடந்தது எல்லோருக்கும் தெரியும். இந்த விவகாரத்தில் மோடி தலையிட்ட பின்பே நடவடிக்கை எடுக்கப்பட்டது. பழங்குடி மக்களுக்கு குரல் கொடுப்பது மோடிதான். காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் தவறு உள்ளது என்று திமுக, திரிணமூல் காங்கிரஸ் கண்டித்தது உண்டா?
இந்நாட்டை பிரித்து பாகிஸ்தான் உருவாக காரணம் ஜின்னாதான். அதையொட்டிதான் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை உள்ளது. நேரு, இந்திரா காந்தி இந்நாட்டை ஆண்டபோது கட்டாய வைப்புத்தொகை என்று சம்பாதிப்பதில் 18 சதவீதம் வங்கியில் டெபாசிட் வைக்கவேண்டும் என்று சட்டம் கொண்டுவந்தார்கள். அமெரிக்காவில் ஒருவர் இறந்தால், அவரின் சொத்தில் 45 சதவீதம் வாரிசுகளுக்கும், மீதி சொத்து இன்றைக்கும் அரசுக்கும் செல்லும்.
அங்கு எல்லாமே வணிகம். அந்தச் சட்டத்தை காங்கிரஸ் இங்கு கொண்டுவர முயற்சி செய்கிறது. முஸ்லிம் என்ற வார்த்தை காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் உள்ளது. நாங்கள் பிரித்து பார்க்கவில்லை. அண்டை நாடுகளில் தூண்டுதலால்தான் காங்கிரஸ் இந்த தேர்தல் அறிக்கையைக் கொடுத்துள்ளது. இது காங்கிரஸ் கட்சியா, மாவோயிஸ்டா, நக்ஸல்பாரியா, தீவிரவாத இயக்கமா என நினைக்க தோன்றுகிறது.
சனாதனத்தை அழிப்பேன் என்ற கூறிய உதயநிதியைக் கண்டிக்காமல் மோடியை பிரிவினைவாதம், மதவாதம் என்று பேசுகிறார் என்று விமர்சிக்கிறார்கள்.அக்பருதின் ஓவைஸி எனும் ஒரு மதத்தலைவர் 'காவல்துறை 15 நிமிடம் ஒதுங்கிக்கொண்டால் 100 கோடி இந்துகளை அழித்துவிடுகிறேன்' என்று பேசியுள்ளார். இதை இந்நாடு சகித்துக்கொண்டுள்ளது.
காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் கோபத்தின் வெளிப்பாடு மட்டுமே உள்ளது. மக்களின் நலன் சார்ந்து இல்லை. நாடு முழுவதும் சுங்கச்சாவடியை அகற்றுவோம் என்று காங்கிரஸ் சொல்வதற்கு என்ன திட்டம் வைத்துள்ளார்கள் என்று தெரியவில்லை. அவ்வளவு எளிமையாக சுங்கச்சாவடியை ஒழித்துவிட முடியாது என்று நினைக்கிறேன்.
தமிழகத்தில் பாஜக கூட்டணி வெற்றி என்பது பத்திரிகையாளர்களின் கணிப்பில் 12 தொகுதிகளாகும், எங்கள் கணிப்பில் 15 தொகுதிகளில் வெற்றி பெறும். மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவில் ஒருவர் கொல்லப்பட்டது சட்டம் - ஒழுங்கு எந்த அளவுக்கு சீர் கெட்டுள்ளது என்பதற்கு உதாரணமாகும்” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT