Published : 25 Apr 2024 05:28 AM
Last Updated : 25 Apr 2024 05:28 AM

திமுகவின் சமூகநீதி கொள்கைகளை காங்கிரஸ் தேர்தல் அறிக்கை எதிரொலிக்கிறது: சமூகநீதி கூட்டமைப்பு மாநாட்டில் ஸ்டாலினின் உரை வாசிப்பு

சென்னை: அகில இந்திய சமூகநீதி கூட்டமைப்பின் தேசிய மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இம்மாநாட்டில் திமுக தலைவர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், எம்.பி.யுமான பி.வில்சன் வாசித்தார்.

அந்த உரையில் முதல்வர் கூறியிருப்பதாவது: இந்தியாவில் சமூகநீதியை வென்றெடுப்பதில் தமிழகம் ஆற்றிய முக்கிய பங்கை அங்கீகரிப்பது மிகப் பொருத்தமானது. சமூகநீதிக்கான ஒளிவிளக்காகத் தமிழகம் திகழும் மரபு, கடந்த 1921-ம் ஆண்டு நீதிக்கட்சி அரசு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்க அறிமுகப்படுத்திய வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணையில் இருந்தே தொடங்குகிறது.

விடுதலைக்குப்பின், இடஒதுக்கீடு முறைக்கு ஆபத்து வந்தபோது திராவிட இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்ட உறுதியான போராட்டங்களால்தான் முதல் அரசியல் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு காரணம் ‘ஹேப்பனிங்ஸ் இன் மெட்ராஸ்’ என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஒடுக்கப்பட்ட சமூகங்களை உயர்த்துவதை இந்த திருத்தம் உறுதி செய்கிறது.

தற்போது பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர், பழங்குடியினத்தவர் ஆகியவர்களுக்கான இடஒதுக்கீடு தமிழகத்தில் 69 சதவீதமாக உள்ளது. இடஒதுக்கீட்டின் அளவு 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என்று தன்னிச்சையாக விதிக்கப்பட்ட அளவையும் விட கூடுதலாக,தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது. குறிப்பாக, தொழில்முறைப் பட்டப்படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவதுடன், அவர்களுக்கான கல்வி, விடுதிச்செலவுகள் அனைத்தையும் ஏற்றுக் கொள்வோம் எனவும் அண்மையில் அறிவித்துள்ளோம்.

திமுகவின் சமூகநீதிக் கொள்கைகளை எதிரொலிக்கும் வகையில், காங்கிரஸ் கட்சியின் 2024தேர்தல் அறிக்கை அமைந்துள்ளதை கண்டு நான் உவப்படைகிறேன். அடுத்து அமைய உள்ளநமது அரசு பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் மற்றும் பழங்குடியினத்தவர்களை உயர்த்தும் வகையில் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்று மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மாநாட்டில், காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல்காந்தி, தேசியஅளவிலான கூட்டணி கட்சிகளின் முக்கிய தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x