Published : 24 Apr 2024 11:36 AM
Last Updated : 24 Apr 2024 11:36 AM
புதுடெல்லி: தமிழகம் உட்பட தென்னிந்தியாவின் பல பகுதிகளில் கடுமையான வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 15 முதல் ஒடிசாவிலும், ஏப்ரல் 17 முதல் மேற்கு வங்கத்திலும் நிலவி வரும் வெப்ப அலையானது தென்னிந்தியாவிலும் பரவக்கூடும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை மையம் தனது அறிவிப்பில், “அடுத்த ஐந்து நாட்களுக்கு கிழக்கு இந்தியா மற்றும் தெற்கு தீபகற்ப இந்திய பகுதிகளான மேற்கு வங்கம், கர்நாடகா, ஒடிசா, தமிழகம், பிஹார், சிக்கிம், தெலங்கானா, உத்தரபிரதேசம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் கடுமையான வெப்ப அலை வீசக்கூடும்.
அதேபோல், கடலோர ஆந்திரா, தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, கோவா, கேரளா, அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா மற்றும் பிஹார் ஆகிய மாநிலங்களில் கடுமையான வெப்ப அலைகளால் உண்டாகும் காற்றின் ஈரப்பதம் அசௌகரியத்தை உண்டாக்கலாம்.
சமவெளி பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு அதிகமாகவும், கடலோரப் பகுதிகளில் 37 டிகிரி செல்சியஸ், மற்றும் மலைப் பகுதிகளில் 30 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேலாகவும் வெப்பநிலை உயரும் போது வெப்பஅலை நிகழ்வு ஏற்பட்டதாக கருதப்படும்.." என்று அறிவித்துள்ளது.
இதற்கிடையே, “அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழக உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இயல்பை விட 2° – 4° செல்சியஸ் வெப்ப நிலை அதிகமாக இருக்கக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும்.
வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 39°–41° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36°–38° செல்சியஸ் வெப்ப நிலை இருக்கக்கூடும்.
இன்று (ஏப்.24) வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.” என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...