Published : 24 Apr 2024 06:30 AM
Last Updated : 24 Apr 2024 06:30 AM
சென்னை/கோவை: காது கேளாத மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது. சென்னை மாநிலக் கல்லூரியில் காது கேளாதவர்களுக்காக பி.காம், எம்.காம், பிசிஏ படிப்புகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் சேர்ந்து படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தர கல்லூரி நிர்வாகம் முடிவு செய்து, அதற்கான முயற்சிகளை முன்னெடுத்தது.
அதன்பலனாக பி.காம், பிசிஏ படிப்புகளை முடித்த காது கேளாத மாணவர்களுக்கு, கல்லூரி வளாகத்திலேயே சிறப்பு வேலைவாய்ப்பு நேர்காணல் கடந்த 3-ம் தேதி நடத்தப்பட்டது. இதில் 18 மாணவிகள் உட்பட 31 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கல்லூரி பேராசிரியர்கள் கூறும்போது, ‘‘கோவையைச் சேர்ந்த `5கே கார் கேர்' நிறுவனம் 31 மாணவர்களை பணிக்காக தேர்வு செய்துள்ளது. அவர்களுக்கு சைகை மொழி மூலம் பயிற்சி அளித்து, பணியில் அமர்த்தப்பட உள்ளனர். வரும் ஆண்டுகளில் பெரிய தொழிற் நிறுவனங்களையும் தொடர்புகொண்டு, அதிக அளவிலான மாற்றுத்திறன் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுதர முயற்சித்து வருகிறோம்’’ என்றனர்.
இதுகுறித்து 5 கே கார் கேர் நிறுவன மனிதவள மேலாண்மைப் பிரிவு அதிகாரி ரஞ்சித் கூறும்போது, ‘‘எங்கள் நிறுவனத்தில் பேச முடியாத, கேட்கும் திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள் சிலர் ஏற்கெனவே பணியாற்றுகின்றனர்.
அவர்களது பணியில் எங்களுக்கு திருப்தி ஏற்பட்டதைத் தொடர்ந்து, பிரசிடென்சி கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தி, காது கேட்காத மாற்றுத் திறனாளிகள் 31 பேரை தேர்வு செய்துள்ளோம். இவர்களுக்கு பயிற்சி அளித்து, உரிய பணி வழங்கப்படும். எங்கள் நிறுவனக் கிளைகளில் 300 மாற்றுத் திறனாளிகளை நியமிக்க உள்ளோம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT