Published : 03 Apr 2018 08:59 AM
Last Updated : 03 Apr 2018 08:59 AM
இந்த ஆண்டு கோடையில் தமிழகத்தில் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்று பேரிடர் மேலாண்மைத் துறை அறிவித்தது போன்று வாட்ஸ்-அப்பில் பரவும் தகவல்களைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத் தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு கோடையில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும், இயல்பை விட 1 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
அதேபோன்று தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் கடந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதிகபட்சமாக திருத்தணியில் 45, சென்னை மற்றும் வேலூரில் 44, திருச்சியில் 42, மதுரையில் 41 டிகிரி செல்சியஸ் என வெப்பநிலை பதிவாகி இருந்தது. கடும் வெப்பத்தால் பொதுமக்கள் பல்வேறு உடல்நலக் கோளாறுகளால் அவதிப்பட்டு வந்தனர்.
அப்போது தமிழக அரசின் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், தமிழகத்தில் வெப்ப அலை வீச இருப்பது தொடர்பாகவும், அந்நேரத்தில் பொதுமக்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்தும் சில அறிவுரைகளை வழங்கியிருந்தது.
இந்நிலையில், இந்த ஆண்டு கோடையில் வழக்கமான வெப்பநிலையை விட 5 டிகிரி செல்சியஸ் வரை கூடுதலாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாகவும், அதனால் பொதுமக்கள் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், வெயில் நேரத்தில் செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்து விளக்கும் தகவல் ஒன்று தற்போது வாட்ஸ் -அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த தகவல்கள் அனைத்தும், தமிழக அரசு லட்சினையுடன், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை என குறிப்பிட்டுள்ள பக்கத்தில் இடம்பெற்றுள்ளன. அத்துறை வெளியிட்டது போன்று போலியாக தயார் செய்யப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஆணையர் கே.சத்யகோபால் கூறியதாவது:
இந்த ஆண்டு கோடையில் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்று எங்களுக்கு எந்த எச்சரிக்கையும் வரவில்லை. இத்துறை சார்பில் வெப்பம் தொடர்பாக எந்த எச்சரிக்கையும் விடப்படவில்லை. வாட்ஸ்-அப்பில் வரும் தகவல் முற்றிலும் தவறானது. பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வதந்தி பரப்பப்படு கிறது. அவ்வாறு அனுப்புவோர் யார் என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே பொதுமக்கள் நம்ப வேண்டும்.
இவ்வாறு சத்யகோபால் கூறினார்.
வானிலை மையம் விளக்கம்
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் கூறியதாவது:
இந்த கோடையில் தமிழக பகுதிகளில் இயல்பை விட 0.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என்று தான் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதைச் சிலர் தவறாகப் புரிந்துகொண்டு 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்று தவறான தகவலை பரப்பி வருகின்றனர்.
மக்கள் அச்சப்பட வேண்டாம்
தமிழகத்தில் அப்படி வெப்ப அலை வீசுவதாக இருந்தால், அது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் உரிய நேரத்தில் முறையாக அறிவிக்கும். அதனால் பொதுமக்கள் தவறான தகவல்களை நம்ப வேண்டாம்.
ஆந்திர மாநிலத்தில் வெப்பம் அதிகரித்தாலோ, நிலக்காற்று வீசுவது அதிகரித்தாலோ, கடல் காற்று வீசும் நேரம் மாறினாலோ தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும். தற்போது அப்படி எந்த நிகழ்வும் இல்லை. தமிழகத்தில் வெப்பம் இயல்பை ஒட்டியே உள்ளது. அதனால் பொதுமக்கள் யாரும் அச்சப்படத்தேவையில்லை. இவ்வாறு பாலசந்திரன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT