Published : 30 Apr 2018 09:28 AM
Last Updated : 30 Apr 2018 09:28 AM
அதிக பயன்பாடு காரணமாக மே, ஜூன் மாதங்களில் அரசு இ-சேவை மையங்கள் முடங்காமல் இருக்க நவீன ஏற்பாடுகளை தகவல் தொழில்நுட்பத் துறை செய்து வருகிறது.
தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் அரசு கேபிள் டிவி நிறுவனம், கூட்டுறவுத் துறை என பல்வேறு துறைகளுக்கு அரசு இ-சேவை மையங்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்து 558 இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. இதில் பல்வேறு அரசுத் துறைகள் வழங்கும் ஜாதிச்சான்று, இருப்பிடச் சான்று, டிஎன்பிஎஸ்சி தேர்வு, குடும்ப அட்டை, சமூக பாதுகாப்பு திட்டங்கள் போன்றவற்றுக்கு விண்ணப்பிப்பது உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட ஆன் லைன் சேவைகள் கட்டண அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் அடுத்த மாதம் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. அதில் தேர்ச்சி பெறும் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உயர் கல்விக்கு விண்ணப்பிப்பார்கள். மேலும் பள்ளி தொடக்க வகுப்புகளில் சேரவும் மாணவர்கள் விண்ணப்பிப்பார்கள். அவர்கள் விண்ணப்பிக்க ஜாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, முதல் தலைமுறை பட்டதாரி சான்று ஆகியவற்றைப் பெற வேண்டியிருக்கும்.
அதற்காக மே, ஜூன் மாதங்களில் லட்சக்கணக்கான மாணவர்கள் அரசு இ-சேவை மையங்களை நாடுவர். அதிக அளவில் இ-சேவை மையங்களுக்கு மாணவர்கள் வருவதால் கடந்த ஆண்டு சர்வரின் வேகம் குறைந்து, அனைத்து மையங்களிலும் பணிகள் முடங்கின. இதை கருத்தில் கொண்டு, இனி வரும் காலங்களில் மே, ஜூன் மாதங்களில் சர்வர் முடங்காமல் இருக்க தகவல் தொழில்நுட்பத்துறை நவீன தொழில்நுட்ப ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இது தொடர்பாக தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது: தற்போது அரசின் பல சேவைகள் இ-சேவை மையங்கள் மூலமாக வழங்கப்படுகிறது. மாவட்ட அளவிலான மின்னாளுமை சேவைகளும் வழங்கப்படுகின்றன. இரு சேவைகளும் ஒரே சர்வர் மூலமாக இயங்கின. இனி பொதுமக்களே இணையதளம் வழியாக 24 மணி நேரமும் விண்ணப்பிக்கும் வசதியை வழங்க இருக்கிறோம். மேலும் இ-சேவை, மாவட்ட அளவிலான மின்னாளுமை திட்டம், இணைய சேவை ஆகியவற்றுக்கு தனித்தனியே சர்வர்களை நிறுவ இருக்கிறோம்.
மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள உமாங் (Unified Mobile Application for New Age Governance ) கைபேசி செயலியில் தமிழக அரசின் மின்னாளுமை சேவைகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் இருந்து பொதுமக்களே வருமானச் சான்று, ஜாதிச் சான்று போன்றவற்றுக்கு 24 மணி நேரமும் விண்ணப்பிக்க முடியும். மேலும் இணையம் மூலமாக வழங்கப்படும் பல்வேறு சேவைகளை ஒரே இணையதளத்தில் பொதுமக்கள் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டங்களால் பொதுமக்கள் 24 மணி நேரமும் வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்க முடியும் என்பதாலும், பல சேவைகளுக்கு தனித்தனி சர்வர்கள் நிறுவப்பட்டிருப்பதாலும், இனி வரும் காலங்களில் மே, ஜூன் மாதங்களில் அரசு சேவைகள் கோரி விண்ணப்பிக்கும் பணி முடங்காது. மாணவர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT