Published : 23 Apr 2018 08:52 AM
Last Updated : 23 Apr 2018 08:52 AM

மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்த 300 மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி: வரும் கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது

மாநகராட்சிப் பள்ளி மாணவர்களின் கற்கும் திறனை மேம் படுத்தும் விதமாக 300 ஆசிரியர் களுக்கு உளவியல் பயிற்சியை சென்னை மாநகராட்சி அளிக் கிறது.

சென்னை மாநகராட்சியில் 281 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அதில் 85 ஆயிரத்து 910 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளிகளில் மொத்தம் 3 ஆயிரத்து 186 ஆசிரியர், ஆசிரியைகள் பணிபுரிந்து வருகின்றனர்.

மாநகராட்சி பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 98 சதவீதம் அளவில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றாலும், மாநில அளவில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இந்நிலையில் அவர்களின் கற்கும் திறனை மேம் படுத்த மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு சிறப்பு பயிற்சிகளை வழங்கும் ‘ஸ்பார்க்’ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் சிறப்பான மதிப்பெண்களை மாணவர்கள் பெற முடிவதில்லை.

மாநகராட்சி பள்ளிகளில் பெரும்பாலும் ஏழை மாணவர்களே படித்து வருகின்றனர். இம்மாணவர்களின் தாய் தந்தையர் பெரும்பாலும் கூலித் தொழிலாளிகளாக இருப்பர். அதனால் குழந்தைகளைக் கவனிக்க முடியாத நிலை இருக்கும். சில குடும்பங்களின் தலைவர்கள் மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர்களாக இருப்பர். அதனால் ஏற்படும் குடும்பச் சண்டைகளால் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்பட்டு, கற்பதில் நாட்டம் இல்லாமல் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தேர்வுக்கு தயார்படுத்த...

இதைக் கருத்தில் கொண்டு மாணவர்களை உளவியல் ரீதியாக அணுகி, உரிய ஆலோசனைகளை வழங்கி, அவர்களைத் தேர்வுக்கு தயார் படுத்த மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதற்கான பயிற்சிகளையும் மாநகராட்சி நிர்வாகம் ஆசிரியர் களுக்கு வழங்கி வருகிறது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:

வழக்கமாக பெற்றோர்களிடம் குழந்தைகள் மனம்விட்டு பேசுவதில்லை. அதே நேரத்தில் ஆசிரியர்களிடம் வெளிப்படையாக பேசுவார்கள். அதனால் முதல்கட்டமாக மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் 300 பேருக்கு, உளவியல் ரீதியாக மாணவர்களை எவ்வாறு அணுகுவது என்பது குறித்த பயிற்சியை, குழந்தை உளவியல் சிறப்பு மருத்துவர்கள் மூலமாக வழங்கி வருகிறோம்.

மாணவர்களுக்கு ஆலோசனை

ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு ஆசிரியரை உளவியல் ஆலோசகராக செயல்பட அறிவுறுத்தி இருக்கிறோம். அவர்கள் மாணவர்களிடம் பேசி, அவர்களுக்குள்ள பிரச்சினைகளை அறிந்து, ஆசிரியர்களின் அதிகாரித்துக்கு உட்பட்டு உரிய ஆலோசனைகளை வழங்கி பிரச்சினைகளில் இருந்து மாணவர்கள் விடுபடுவதற்கான ஆலோசனைகளை வழங்குவார்கள்.

இதன்மூலம் மாணவர்களுக்கு தானாகவே கல்வி கற்பதில் ஆர்வம் ஏற்பட்டுவிடும். தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறவும் ஏதுவாக இருக்கும். ஆசிரியர்கள் உளவியல் ஆலோசனை வழங்கும் திட்டத்தை வரும் கல்வியாண்டு முதல் செயல்படுத்த திட்டமிட்டிருக்கிறோம்.

இவ்வாறு மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x