Published : 24 Apr 2024 04:16 AM
Last Updated : 24 Apr 2024 04:16 AM

திருச்சியில் கேலோ இந்தியா போட்டியால் புத்துயிர் பெற்ற மல்லர் கம்பம் விளையாட்டுக்கு தனித் திடல்

திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் மல்லர் கம்பம் விளையாட்டுக்கென அமைக்கப்பட்ட தனித்திடலில் நிலை மல்லர் கம்பம் பயிற்சியில் ஈடுபட்ட வீரர். (அடுத்த படம்) கயிறு மல்லர் கம்பத்தில் திறமையை வெளிப்படுத்திய வீராங்கனை.

திருச்சி: திருச்சியில் நடைபெற்ற கேலோ இந்தியா விளையாட்டு போட்டியால் புத்துயிர் பெற்றுள்ள மல்லர் கம்பம் விளையாட்டுக்கு, அண்ணா விளையாட்டரங்கில் தனித் திடல் அமைக்கப்பட்டு, 50-க்கும் மேற்பட்டசிறுவர், சிறுமியர் பயிற்சி பெற்று வருகின்றனர்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு மல்லர் கம்பம். சோழர்களும், பல்லவர்களும் மல்லர் விளையாட்டை போற்றி பாதுகாத்தனர். காலப்போக்கில் மறைந்துவந்த இந்த விளையாட்டு, விழுப்புரம் மாவட்டம் வி.மருதூரைச் சேர்ந்த உலகதுரை என்றஉடற்பயிற்சி ஆசிரியரால் தமிழகத்தில் மீண்டும் வளரத் தொடங்கியது. திருச்சியைச் சேர்ந்த விசு என்பவர் விழுப்புரம் மாவட்டத்தில் பயிற்சி பெற்று தேசிய பல்கலைக் கழகம் இடையிலான போட்டியில் பங்குபெற்று பல்வேறு பதக்கங்களை வென்றார்.

அதைத்தொடர்ந்து, அவர் திருச்சியில் 2017-ம் ஆண்டு முதல் பயிற்சி அளிக்கத் தொடங்கினார். ஆனாலும், இந்த விளையாட்டு பெரிய வளர்ச்சி அடையாமல் இருந்த நிலையில், திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற கேலோஇந்தியா விளையாட்டுப் போட்டியில் மல்லர் கம்பம், களரிபயட்டு ஆகிய போட்டிகள் நடைபெற்றன.

இதில், மல்லர் கம்பம் போட்டியில் தமிழக அணி இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தது. இதையடுத்து, இவ்விளையாட்டை வளர்த்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட திருச்சி மாவட்ட விளையாட்டு அலுவலர் பி.வேல்முருகன், மல்லர் கம்பம் விளையாட்டுக்கென அண்ணா விளையாட்டு அரங்கில் தனியாக இடம் ஒதுக்கி, பயிற்சியாளரை நியமித்து, கேலோ இந்தியா போட்டிகளில் பயன்படுத்தப்பட்ட மல்லர் கம்ப உபகரணங்களை பயன்படுத்தி மல்லர் கம்பம் விளையாட்டுத் திடலை உருவாக்கி உள்ளார்.

இதில் 50-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் நாள்தோறும் பயிற்சி பெற்று வருகின்றனர். இது குறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் பி.வேல் முருகன் கூறியது: திருச்சியில் மல்லர் கம்பம் விளையாட்டை முன்னிலைப்படுத்தி பயிற்சி அளிக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியிருந்தார். அதன்படி, இங்கு நீச்சல் குளம் அருகில் மல்லர் கம்பம் விளையாட்டுத் திடல் தனியாக அமைக்கப்பட்டுள்ளது.

3 வயது நிறைவடைந்த சிறுவர், சிறுமிகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. தற்போது, இங்கு 50-க்கும் மேற்பட்ட சிறார்கள் ஆர்வத்துடன் பயிற்சி பெற்று வருகின்றனர். சிறப்பாக பயிற்சி பெறும் வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து, மாநில, தேசிய போட்டிகளுக்கு அனுப்பி வைக்க உள்ளோம் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x