Published : 23 Apr 2024 09:44 PM
Last Updated : 23 Apr 2024 09:44 PM
தமிழகத்தில் வெப்ப அலை எச்சரிக்கை: தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இயல்பை விட 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட வெப்ப நிலை அதிகபட்சமாக இருக்கக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!: மதுரை - கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு அழகர்கோவிலில் இருந்து புறப்பட்ட கள்ளழகருக்கு திங்கள்கிழமை மதுரை மூன்றுமாவடியில் பக்தர்கள் எதிர்சேவை செய்தனர்.
அதன் தொடர்ச்சியாக, செவ்வாய்க்கிழமை அதிகாலையில் சித்ரா பவுர்ணமியில் பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். ஆற்றுப் பகுதியில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா, மாயவதாரா, அழகர்மலையானே’ என உணர்ச்சிப் பெருக்கில் விண்ணதிர கோஷங்கள் எழுப்பினர். இரவு முழுவதும் தூங்காமல் கண்விழித்து களைப்பில் இருந்த பக்தர்கள் கள்ளழகர் முகம் கண்டதும், ‘இதற்குத்தானே இவ்வளவு நேரம் காத்திருந்தோம்’ என மகிழ்ச்சிப்பெருக்கில் ஆற்றுக்குள் ஆடிப்பாடி திளைத்தனர்.
“பீதியில் இண்டியா கூட்டணி” - பிரதமர் மோடி: ராஜஸ்தானின் டோங்க் நகரில் நடந்த பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “நேற்று முன்தினம் ராஜஸ்தானில் நான் சில உண்மையை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தினேன். காங்கிரஸ் உங்கள் சொத்துகளை எக்ஸ்ரே செய்யும் என அதன் தலைவர் கூறுகிறார். உங்களின் சொத்துகள் மற்றும் பெண்கள் அணியும் நகைகளை கணக்கெடுப்பதாகவும் அவர்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். உங்களுக்கு இரண்டு வீடுகள் இருந்தால்கூட, அவர்கள் எக்ஸ்ரே செய்து ஒரு வீட்டைப் பறிப்பார்கள்.
இப்படி, மக்களின் சொத்துகளைப் பறித்து காங்கிரஸ் தனது ஸ்பெஷல் ஆட்களுக்கு விநியோகிக்க சதி செய்கிறது என்ற உண்மையை நான் வெளிப்படுத்தினேன். இதனால், ஒட்டுமொத்த காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணியும் பீதியடைந்துள்ளது. அவர்களின் அரசியலை நான் அம்பலப்படுத்திய போது, அவர்கள் என்னை திட்டும் அளவுக்கு கோபமடைந்தார்கள். எதிர்க்கட்சியினர் ஏன் உண்மையை கண்டு பயப்படுகிறார்கள். காங்கிரஸ் ஏன் தனது கொள்கைகளை மறைக்க விரும்புகிறது?
நீங்கள் மறைத்ததை நான் அம்பலப்படுத்தியதும், நீங்கள் பயத்தில் நடுங்குகிறீர்கள். மேலும் இதனை வெளிப்படுத்தியதும் காங்கிரஸுக்கு என் மீது அதிக வெறுப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், என்னை வசைபாடத் செய்யத் தொடங்கியுள்ளனர். காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியலில் முழுமையாக மூழ்கியுள்ளது” என்று பேசினார்.
பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் பதிலடி: “அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியே இந்தியாவுக்குத் தேவை. இண்டியா கூட்டணி அரசால் மட்டுமே அதை சாத்தியப்படுத்த முடியும்.
இன்று 21 கோடீஸ்வரர்கள் இணைந்து 70 கோடி இந்தியர்களைவிட அதிகமான சொத்துகளை வைத்துள்ளனர். இவை குறித்து பிரதமர் மோடி ஒருபோதும் மக்களிடம் சொல்லப்போவதில்லை” என்று காங்கிரஸ் கட்சித் தெரிவித்துள்ளது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் மக்களின் சொத்துகள், வீடுகள் அபகரிக்கப்படும் என்று பிரதமர் மோடியின் பேச்சுக்கு பதிலடி தரும் வகையில், காங்கிரஸ் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது.
இதனிடையே, “கட்சி சார்பற்ற முறையில் தேர்தல் ஆணையம் செயல்படவில்லை. இது துரதிர்ஷ்டவசமானது” என்று முஸ்லிம்கள் தொடர்பான பிரதமர் மோடியின் கருத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
மோடியின் பேச்சுக்கு தமிழக தலைவர்கள் எதிர்ப்பு: “பிரதமர் நரேந்திர மோடியின் நச்சுப் பேச்சு இழிவானது. மிகவும் வருத்தத்துக்கு உரியது. தனது தோல்விகளுக்கு எதிரான மக்களின் கோபத்துக்கு அஞ்சி, மத உணர்ச்சிகளைத் தூண்டி, வெறுப்புப் பேச்சின் மூலம் தாம் எதிர்கொண்டுள்ள தோல்வியைத் தவிர்க்கப் பார்க்கிறார் மோடி. வெறுப்பும் பாகுபாடும்தான் மோடியின் அசலான உத்தரவாதங்கள்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.
“அரசியல் கட்சித் தலைவர்கள், மத வெறுப்புக் கருத்துகளை தேர்தலுக்காக பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்” என்று பிரதமர் மோடியின் ராஜஸ்தான் பொதுக் கூட்ட பேச்சு தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
“இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடும் மோடி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
கேஜ்ரிவால், கவிதாவின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு: மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைதான டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், தெலங்கானா முன்னாள் முதல்வர் மகள் கவிதா ஆகியோரின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மன்னிப்பு விவாகாரம்: பாபா ராம்தேவுக்கு புதிய உத்தரவு: “பதஞ்சலி நிறுவனம் சார்பில் செய்தித்தாள்களில் வெளியான மன்னிப்பு விளம்பரத்தின் அளவு மிகவும் சிறியதாக உள்ளது. அவர்கள் பத்திரிகையில் எந்த அளவு பிரசுரித்தீர்கள் என்பதை நாங்கள் பார்க்க வேண்டும். அதனால், அசல் விளம்பரங்களைக் கொண்டு வாருங்கள்” என்று பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“ப.சிதம்பரம் எண்ணம் ஒருபோதும் பலிக்காது” - அமித் ஷா: "தங்கள் வாக்கு வங்கியை குறிவைத்தே காங்கிரஸ் சிஏஏ சட்டத்தை ரத்து செய்ய விரும்புகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியை மக்கள் நன்கு புரிந்துகொண்டதால், ப.சிதம்பரத்தின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது" என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இங்கிலிஷ் கால்வாயை கடக்க முயன்ற 5 பேர் பலி: இங்கிலாந்துக்குள் சட்டவிரோதமாக குடியேறும் முனைப்பில் படகில் இங்கிலிஷ் கால்வாயைக் கடக்க முயன்றவர்களில் 5 பேர் உயிரிழந்தனர். இதனை பிரான்ஸ் நாட்டுப் பத்திரிகைகள் உறுதி செய்துள்ளன. படகு கவிழ்ந்து 5 பேர் இறந்த நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு பிரான்ஸ் நாட்டின் வடக்கே உள்ள மிகப் பிரபலமான போலோன் மீன்பிடி துறைமுகம் பகுதிக்குக் கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரிட்டனுக்குள் சட்டவிரோதமாக குடியேற முயற்சிப்பவர்களைத் தடுக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், இச்சம்பவம் நடந்துள்ளது கவனம் பெற்றுள்ளது.
‘பாஜகவின் பி-டீம் தான் மாயாவதி’: “இண்டியா கூட்டணியில் இணையாது விலகியிருக்கும் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர்களை பாஜக தேர்ந்தெடுக்கிறது. இதன்மூலம், பாஜகவின் ‘பி டீம்’ ஆக மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி செயல்படுவது நூறு சதவீதம் உறுதியாகி உள்ளது” என்கிறார் அம்ரோஹா தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் டேனிஷ் அலி.
நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேத்தில் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இங்குள்ள 75 மாவட்டங்களில் சுமார் 20-ல் முஸ்லிம்களின் வாக்குகள் அதிகமாக உள்ளன. இம்முறை முஸ்லிம்களின் மொத்த வாக்குகள் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதிக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
ஆனால், இவர்களது லாபத்துக்கான பங்கில் பிஎஸ்பியின் தலைவர் மாயாவதி இழப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில், மாயாவதி 11 முஸ்லிம் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். இதுவரை 42 வேட்பாளர்கள் பெயரை அறிவித்தவர் மீதம் உள்ளவற்றிலும் முஸ்லிம்களை சேர்க்கும் வாய்ப்புகள் உள்ளன. இந்தப் பின்னணியில், பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த டேனிஷ் அலியின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
‘தமிழகத்தில் வெப்பத் தணிப்பு திட்டத்தை செயல்படுத்துக’: காலநிலை மாற்றம் காரணமாக தமிழ்நாட்டில் வெப்பத்தின் கடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இனி வருங்காலங்களில் அதைக் கட்டுப்படுத்தும் வகையில் வெப்பத் தணிப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
“அபிஷேக் பானர்ஜியை சுட்டுக் கொல்ல நடந்த முயற்சி...”: “கொல்கத்தாவிலுள்ள தனது வீட்டை உளவு பார்த்த அந்த நபரைச் சந்திக்க அபிஷேக் பானர்ஜி அன்று சம்மதித்திருந்தால், அவர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பார்” என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பேசினார்.
ஆந்திராவின் பணக்கார வேட்பாளர்: ஆந்திராவில் குண்டூர் மக்களவைத் தொகுதியின் தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளரான டாக்டர் பெம்மசானி சந்திரசேகர் தனக்கு மொத்தம் ரூ.5,785.28 கோடி குடும்பச் சொத்துகள் இருப்பதாக தேர்தல் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT