Published : 23 Apr 2024 09:16 PM
Last Updated : 23 Apr 2024 09:16 PM

“நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி பொது மன்னிப்பு கேட்க வேண்டும்” - சீமான்

சென்னை: “ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பரப்புரையின்போது இஸ்லாமியர்களை இழிவுப்படுத்தி பேசியதற்கு பிரதமர் மோடி, நாட்டு மக்கள் அனைவரிடமும் உடனடியாக பொது மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பரப்புரையின்போது இஸ்லாமியப் பெருமக்களை இழிவுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி பேசியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. இந்தியப் பெருநாடு விடுதலையடைவதற்கு முன்பிருந்தே இஸ்லாமியப் பெருமக்கள் நீண்டகாலமாக இந்த நிலத்தில் நிலைத்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்த மண்ணின் கோடிக்கணக்கான பூர்வகுடி மக்கள் இஸ்லாத்தை விரும்பி ஏற்றுக்கொண்டார்கள். அவர்கள் யாரும் இந்த நாட்டுக்கு அந்நியர்கள் அல்ல. ஆனால், பிரதமர் மோடி இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்கள் அனைவரும் இந்த நாட்டுக்கு வெளியிலிருந்து வந்தவர்கள் போலவும், இந்துகளின் சொத்துகளை அபகரித்தது போலவும் பேசுவது அற்ப அரசியல் லாபத்துக்காக மதப்பிரிவினையை ஏற்படுத்துகின்ற சிறிதும் மனச்சான்றற்றச் செயலாகும்.

தம்முடைய ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைப்பதற்காக நாட்டு மக்களின் மனங்களில் வெறுப்பு நஞ்சை விதைக்கும் பிரதமர் மோடியின் பரப்புரை பேச்சு இந்த நாட்டினை அழிவுப்பாதைக்கே இட்டுச் செல்லும். மீண்டும் மோடி இந்தியாவின் பிரதமரானால் இந்த நாட்டில் சமத்துவம், ஜனநாயகம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை என்பதெல்லாம் முற்று முழுதாக ஒழிக்கப்பட்டுவிடும்.

இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டையும், பன்முகத்தன்மையையும் சிதைத்தழிக்கும் மோடி தலைமையிலான பாஜகவுக்கு தேசபக்தி குறித்துப் பேச எந்தத் தகுதியும் கிடையாது. நடைபெறுகின்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவின் பாசிச மனப்பான்மைக்கு நாட்டு மக்கள் தக்கப்பாடம் புகட்டுவார்கள்.

ஆகவே, இஸ்லாமியர்களை இழிவுப்படுத்தி பேசியதற்கு பிரதமர் மோடி நாட்டு மக்கள் அனைவரிடமும் உடனடியாகப் பொதுமன்னிப்பு கேட்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று சீமான் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x