Published : 23 Apr 2024 02:44 PM
Last Updated : 23 Apr 2024 02:44 PM

‘குடும்ப மளிகை செலவு ரூ.2,000 அதிகரிப்பு... விலைவாசி உயர்வுக்கு நடவடிக்கை என்ன?” - ராமதாஸ்

ராமதாஸ் | கோப்புப் படம்

சென்னை: “விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். மளிகைப் பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் வழங்க வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “தமிழகத்தில் எண்ணெய் மற்றும் மளிகைப் பொருட்களின் விலைகள் கடந்த ஒரு மாதத்தில் பெருமளவில் உயர்ந்திருக்கின்றன. பருப்பு வகைகள், மஞ்சள், மிளகாய்த் தூள் ஆகியவற்றின் விலைகள் கிலோவுக்கு ரூ.15 வரை உயர்ந்துள்ளன. மிளகு, சீரகம், மிளகாய், மல்லி உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் விலைகள் கிலோவுக்கு ரூ.50 வரை உயர்ந்திருக்கின்றன. எண்ணெய் விலைகள் லிட்டருக்கு ரூ.30 வரை உயர்ந்திருக்கின்றன. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

எண்ணெய், மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் மாதந்திர செலவு ரூ.2000 வரை உயர்ந்திருக்கிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு அவற்றின் தட்டுப்பாடு ஒரு காரணம் என்றால், அப்பொருட்களின் பதுக்கலை தடுக்கத் தவறிய தமிழக அரசின் அலட்சியம் இன்னொரு காரணமாகும். அந்த வகையில் விலைவாசி உயர்வுக்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

கடந்த சில மாதங்களில் அரிசி விலை கிலோவுக்கு ரூ.15 வரை உயர்ந்ததால் பொதுமக்கள் கடுமையான்ன பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். இப்போது மற்ற பொருட்களின் விலைகளும் உயர்ந்திருப்பதால் மக்களால் சமாளிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை. இதற்காகத் தான் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சரின் தலைமையில் விலைக் கண்காணிப்புக் குழு செயல்பட்டு வருகிறது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் எண்னெய், பருப்பு மற்றும் மளிகைப் பொருட்களின் விலைகள் அதிகரித்திருப்பது விலை கண்காணிப்புக் குழுவுக்கு தெரியுமா? விலைகளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வசதியாக, இது குறித்த அறிக்கைகளை விலைக் கண்காணிப்புக் குழு அரசிடம் தாக்கல் செய்ததா என்பது தெரியவில்லை.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். எண்ணெய், பருப்பு விலையை கட்டுப்படுத்தும் நோக்குடன் நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படும் துவரம் பருப்பு மற்றும் பாமாயிலின் அளவை 2 கிலோவாக உயர்த்த வேண்டும். தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்தவாறு ரேஷன் விலைக் கடைகள் மூலம் மீண்டும் மலிவு விலையில் உளுந்து வழங்க வேண்டும். மளிகைப் பொருட்களையும் ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x