Published : 23 Apr 2024 12:59 PM
Last Updated : 23 Apr 2024 12:59 PM
சென்னை: காலநிலை மாற்றம் காரணமாக தமிழ்நாட்டில் வெப்பத்தின் கடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இனிவருங்காலங்களில் அதைக் கட்டுப்படுத்தும் வகையில் வெப்பத்தணிப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் எழுதிய கடிதத்தில், “தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காலநிலை மாற்றத்தின் காரணமாக அடுத்தடுத்த ஆண்டுகளில் நிலைமை மேலும் மோசமடையக்கூடும். எனவே, தொலைநோக்கு அடிப்படையில் தமிழ்நாட்டிற்கான வெப்பத் தணிப்பு செயல்திட்டத்தை (Heat Action Plan) உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்று தங்களைக் கேட்டுக்கொள்வதற்காக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
இந்தியா முழுவதும் 2024 ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வழக்கத்தை விட அதிகமாக வெப்பம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மிக அதிக வெப்பம் நிலவும். இயல்பை விட அதிகமான நாட்கள் வெப்ப அலை (Heat Waves) வீசக்கூடும், பல நகரங்களை நகர்ப்புற வெப்பத்தீவு (Urban Heat Islands) பதிப்பு தாக்கக் கூடும். தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தும் ‘ஈரக்குமிழ் வெப்ப நிலை’ (Wet-Bulb Temperature) பாதிப்பு ஏற்படக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலை சமாளிப்பதற்காகவும், அதிவெப்பத்தை எதிர்கொள்வதற்காகவும் மாநில அளவிலும், மாவட்டங்கள் அளவிலும், ஒவ்வொரு மாநகரம் மற்றும் ஒவ்வொரு நகருக்காகவும், வெப்பத் தணிப்பு செயல் திட்டங்களை (Heat Action Plans) உருவாக்கி செயல்படுத்த வேண்டும். அறிவியல்பூர்வமாகவும், மக்கள் பங்கேற்புடனும், போதுமான நிதி ஆதாரத்துடனும் இதனை போர்க்கால வேகத்தில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்.
இன்றைய உலக மக்கள் அனைவரையும் பாதிக்கும் தலையாய சிக்கல் காலநிலை மாற்றமே ஆகும். மனிதர்களால் வளிமண்டலத்தில் கலக்கவிடப்படும் கரியமிலவாயு உள்ளிட்ட பசுங்குடில் வாயுக்கள் (Greenhouse Gases – GHGs) சூரிய வெப்பத்தை பிடித்துவைப்பதால், புவியின் மேற்பரப்பு வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்துசெல்கிறது. கடந்த 150 ஆண்டுகளில், பூமியின் சராசரி வெப்பநிலையில் 1.2 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது. இது மேலும் அதிகரித்து 1.5 டிகிரி செல்சியஸ் அளவை விரைவில் எட்டிவிடும்.
ஒவ்வொரு 0.1 டிகிரி செல்சியஸ் அதிகரிப்பும் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை அதிகரிக்கக் கூடியதாகும். வழக்கத்தைவிட அதிகமாக தாக்கும் புயல், வெள்ளம், காட்டுத்தீ, பனிப்பாறைகள் உருகுதல், கடல்மட்டம் உயர்தல், அதிகரிக்கும் தொற்றுநோய்கள், உணவு உற்பத்தி பாதிப்பு, பொருளாதார பாதிப்புகள், வன்முறை போன்றவை காலநிலை மாற்றத்தின் கேடான விளைவுகள் ஆகும். இத்தகையக் கேடுகள் இனி வரும் ஆண்டுகளில் மென்மேலும் அதிகமாகிக் கொண்டே செல்லும். அவற்றில் ஒரு அங்கமாக அதிதீவிர வெப்பம் மற்றும் வெப்ப அலை இடர்கள் இனிவரும் ஆண்டுகளில் அதிகரித்துக் கொண்டே செல்லும்.
புவிவெப்பமடைவதால் அதிகம் பாதிக்கப்படும் ஒரு பகுதியாக தமிழ்நாடு உள்ளது. அதிலும் குறிப்பாக, வெப்பத்தால் அதிகம் பாதிக்கப்படும் 23 இந்திய மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு வகைப்படுத்தப் பட்டுள்ளது. புவிவெப்பம் தொடர்ந்து அதிகரித்துச் செல்கிறது. கடந்த 1,25,000 ஆண்டுகளில் இல்லாத மிக அதிக வெப்பமான ஆண்டாக 2023ஆம் ஆண்டு கணக்கிடப்பட்டுள்ளது. வரலாற்றிலேயே மிகவும் வெப்பமான மார்ச் மாதமாக 2024 மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 மார்ச் மாதத்தில் புவிமேற்பரப்பு சராசரி வெப்பநிலை 14.14 டிகிரி செல்சியசாக இருந்தது. இது 1991 & 2020ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட மார்ச் மாத சராசரி வெப்பநிலையை விட 0.73 டிகிரி செல்சியஸ் அதிகமாகும். இதற்கு முந்தைய மார்ச் மாத உச்ச வெப்பநிலை நிலவிய 2016ஆம் ஆண்டினை விட, 2024 மார்ச் மாத வெப்பநிலை 0.10 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
2023 ஜூன் முதல் 2024 மார்ச் வரை, கடந்த பத்து மாதங்களாக, எல்லா மாதங்களுமே உலக வரலாற்றில் அதிக வெப்பமான மாதமாக இருந்துள்ளது. கடந்த 12 மாதங்களின் சராசரி வெப்பநிலை அதற்கு முந்தைய அனைத்து 12 மாதங்களின் வெப்பத்தை விட அதிகம். இது 1991 & 2020 ஆண்டு சராசரியை விட 0.70 டிகிரி செல்சியஸ் அதிகம். 1850 &1900 சராசரியை விட 1.58 டிகிரி செல்சியஸ் அதிகம்.
தமிழ்நாட்டின் பல நகரங்களில் வெப்பத்தின் பாதிப்பு அளவுக்கு அதிகமாக தாக்கிவருகிறது. எடுத்துக்காட்டாக, ஏப்ரல் 19ஆம் நாளன்று ஈரோட்டில் 5.2 டிகிரி செல்சியசும், மதுரையில் 4.5 டிகிரி செல்சியசும், தருமபுரியில் 4.1 டிகிரி செல்சியசும் ‘வழக்கத்தை விட கூடுதலாக’ வெப்பம் நிலவியது.
சமவெளிப்பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸ் அளவும், மலைப்பகுதிகளில் 30 டிகிரி செல்சியஸ் அளவும் வெப்ப அலையாக வகைப்படுத்தப்படுகிறது. சென்னை போன்ற கடலோரப் பகுதிகளில் 37 டிகிரி செல்சியஸ் அளவைக் கடந்தால் அது வெப்ப அலை ஆகும். மேலும், ஒரு பகுதியின் சராசரி வெப்பநிலையை விட 4.5 டிகிரி செல்சியஸ் கூடுதலாக பதிவானால் அதுவும் வெப்ப அலை ஆகும்.
வெப்பத்தின் தாக்கம் கிராமங்களை விட நகரங்களில் அதிகமாக இருக்கும். நகரங்களில் மரங்கள் இல்லாமை, பசுமைப் பகுதிகள் அழிவு, காற்றோட்டக் குறைவு, காற்று மாசுபாடு உள்ளிட்ட காரணங்களால் ஊரகப் பகுதிகளில் நிலவும் வெப்பத்தை விட 2 முதல் 5 டிகிரி செல்சியஸ் கூடுதல் வெப்பநிலை உயர்வு நகரங்களில் ஏற்படுகிறது. இதனை நகர்ப்புற வெப்பத்தீவு விளைவு (urban heat island effect) என்கிறார்கள்.
வெப்ப நிலையும் காற்றில் ஈரப்பதமும் (Humidity) ஒரு சேர அதிகரிக்கும் போது, மனித உடலால் வியர்வையை வெளியேற்றி வெப்பத்தை தணிக்க முடியாது. இதனால் உயிரிழப்புகள் நேரும். இந்த கடுமையான வெப்ப பாதிப்பினை ‘ஈரக்குமிழ் வெப்ப நிலை’ (Wet-Bulb Temperature) என்கின்றனர். சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் கடலோர நகரப்பகுதிகளில் இந்த பாதிப்பு ஏற்படக்கூடும்.
அதிவெப்பம் என்பது ஒரு பொதுச் சுகாதார சிக்கல் ஆகும். மக்களையும் விலங்குகளையும் மெல்ல மெல்ல பாதிப்பதால் இதனை ‘சத்தமில்லா பேரிடர்’ (Silent disaster) என்றும் அழைப்பர். இதனால் பலவிதமான உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுகின்றன. சுற்றுப்புறத்தில் வெப்பம் அதிகரிக்கும் போது உடலின் வெப்பமும் அதிகமாகிறது. அதனை சமாளிக்க உடல் வியர்வையை வெளியேற்றுகிறது. ஆனாலும், மனித உடலால் ஓரளவுக்குத்தான் வெப்பத்தை குறைக்க முடியும். மிக அதிக வெப்பத்தால் வெப்பச் சொறி, வேனல் கட்டி, வெப்பப் பிடிப்பு, வெப்பத் தசைவலிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. தலைவலி, வாந்தி, தலைச்சுற்றல், மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் வெப்பத் தளர்ச்சி (Heat Exhaustion) ஏற்படுகிறது. அதிக வெப்பத்தால் ஏற்படும் வெப்ப மயக்க நோய் (Heat Stroke) மிக ஆபத்தானதும் உயிரிழப்பை ஏற்படுத்துவதுமாகும்.
சிறார்கள், கர்ப்பிணிகள், மூத்த குடிமக்கள் வெப்பத்தால் அதிகம் பாதிப்படைகின்றனர். சுவாச நோய்கள், இருதய நோய்கள், நீரிழிவு குறைபாடு உடையவர்களும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். வெயிலில் வேலை செய்யும் தொழிலாளர்கள், உயர்வெப்ப சூழலில் பணியாற்றும் தொழிலாளர்கள், ஓட்டுனர்கள், குடிசை வாசிகள் உள்ளிட்டோர் வெப்பத்தால் அதிக அளவில் பாதிப்படைகின்றனர்.
உணவு, தண்ணீர், சுற்றுச்சூழல், வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தில் வெப்பத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மிகக்கடுமையாக இருக்கும் என மதிப்பிடுகிறார்கள். அதிக வெப்பத்தால் உணவு உற்பத்தியில் பெரிய அளவில் இழப்புகள் ஏற்படும். மரங்கள், காடுகள், வனவிலங்குகளுக்கு பெரும் பாதிப்புகள் நேரும். விவசாயம் மற்றும் கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்படுவர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படையும். இவ்வாறாக, ஒட்டுமொத்த தமிழக பொருளாதாரமும் வெப்பத்தால் பாதிப்படையக் கூடும்.எனவே, தமிழ்நாட்டினை அதிவெப்பத்தின் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு போர்க்கால வேகத்தில் தொடங்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு தமிழக நகரங்களுக்கும் ஊரகப் பகுதிகளுக்கும் வெப்பத் தணிப்பு செயல் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த வேண்டும். வெப்பத்தை எதிர்கொள்ளும் திட்டங்களை செயல்படுத்துவதில் அகில இந்தியாவுக்கும் முன்மாதிரியாக அகமதாபாத் நகர வெப்பத் தணிப்பு செயல் திட்டம் (Ahmedabad Heat Action Plan) 2013 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. அதனை பின்பற்றி 2017ஆம் ஆண்டில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மாநிலங்களில் வெப்ப செயல் திட்டங்களை உருவாக்குவதற்கான தேசிய வழிகாட்டியினை வெளியிட்டது. மேம்படுத்தப்பட்ட இரண்டாவது வழிகாட்டி 2019ஆம் ஆண்டில் வெளியானது. அகமாதாபாத் முன்மாதிரியை பின்பற்றி ஆந்திரம், பீகார், மகாராஷ்டிரா, ஒடிசா மாநிலங்களில் மாநகரங்களுக்கான வெப்ப செயல் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
தமிழ்நாட்டிற்கான வெப்ப அலை செயல்திட்டம் (Heat Wave Action Plan) 2019ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. ஆனால், இந்த செயல்திட்டம் முழுமையானதாகவும் இல்லை. செயலாக்கப்படவும் இல்லை. தமிழ்நாட்டில் வெப்பத்தை எதிர்கொள்வதற்கான விரிவான திட்டங்கள், வழிகாட்டிகள், அரசாணைகள், நிதி ஆதாரம், பயிற்சிகள், கண்காணிப்பு போன்றவை தேவைப்படும் அளவில் இல்லை.
தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழுவானது (Tamil Nadu State Planning Commission) தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டிய வெப்பத் தணிப்பு செயல்திட்டம் தொடர்பான வரைவு அறிக்கையை 2023ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசுக்கு அளித்துள்ளது. இந்த திட்டத்தை (Heat Mitigation Strategy for Tamil Nadu) உருவாக்குவதற்கான உதவிகளை இங்கிலாந்து அரசு செய்துள்ளது. ஆனால், இந்த அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை என்பதை முதலமைச்சராகிய தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
தமிழ்நாடு முழுமைக்கும் மற்றும் ஒவ்வொரு மாவட்டம், ஒவ்வொரு நகருக்குமான வெப்பத் தணிப்பு செயல்திட்டங்கள் உடனடியாக உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும். பரவலாக்கப்பட்ட வடிவிலும், மக்கள் பங்கேற்புடனும், காலநிலை தகவமைப்பை (Adaptation) முன்னிலைப்படுத்தியும், அனைத்து துறையினரையும் உள்ளடக்கியும் இத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.
உள்ளூர் அளவிலான வானிலை முன்னெச்சரிக்கைகள், நகர்ப்புற பசுமையை அதிகமாக்குதல், நீர்நிலைகள் பாதுகாப்பு, குளிர்ந்த கூறைகள் திட்டம், வெப்பத்தை சமாளிக்கும் காற்றோட்டமான கட்டுமானங்கள், மருத்துவ கட்டமைப்புகள், விழிப்புணர்வு பிரச்சாரம், வெப்ப ஆபத்தில் சிக்குவோருக்கான புகலிடங்கள், போதுமான குடிநீர் வசதிகள், போக்குவரத்தில் வெப்பத்தை சமாளித்தல் மற்றும் பொதுப்போக்குவரத்தை அதிகமாக்குதல், அவசர உதவி வசதிகள், பல்துறையினர் பங்கேற்பு, போதுமான நிதி ஆதாரம் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாக வெப்பத் தணிப்பு செயல்திட்டம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும். இவற்றை செயலாக்குவதற்கான முழுமையான பொறுப்புடைமை (Accountability) விதிகளை தமிழக அரசு வெளியிட வேண்டும்.
இவ்வாறான நடவடிக்கைகளை உள்ளடக்கிய வெப்பத் தணிப்பு செயல்திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தி கோடைக் கால வெப்பத்திலிருந்து தமிழ்நாட்டு மக்களைக் காக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழு தயாரித்துள்ள வெப்பத் தணிப்பு செயல்திட்டத்தை உடனடியாக வெளியிட்டு, மக்கள் கருத்துக்களை கேட்டு, முழுமையான ஒரு வெப்பத் தணிப்பு செயல்திட்டத்தை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தங்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT