Published : 23 Apr 2024 11:00 AM
Last Updated : 23 Apr 2024 11:00 AM

“மோடி மீது சட்ட நடவடிக்கை” - தேர்தல் ஆணையத்துக்கு திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: "இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடும் மோடி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில், “ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா என்ற இடத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது நரேந்திர மோடி இஸ்லாமியர்களுக்கு எதிரான நச்சுக் கருத்துக்களை தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பல ஆண்டுகளுக்கு முன்பு கூறிய கருத்துகளை விஷமத்தனமாகத் திரித்து இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு வரும் விதமாகவும் அவர்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாகவும் மோடி பேசியிருக்கிறார்.

மோடியின் பேச்சு தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானதாகவும் உள்ளது. “காங்கிரஸ் கட்சி பொதுமக்களிடம் உள்ள தங்கம் வெள்ளி முதலான சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்து அவற்றை முஸ்லிம்களுக்கு விநியோகம் செய்யத் திட்டமிட்டு இருக்கிறது” என அப்பட்டமான ஒரு பொய்யை மோடி பேசி இருக்கிறார். “உங்கள் தேர்தல் அறிக்கையில் நீங்கள் என்ன சொல்லி இருக்கிறீர்கள்? பொதுமக்களிடம் உள்ள தங்கத்தையெல்லாம் கைப்பற்றி எல்லோருக்கும் கொடுக்கப் போவதாக சொல்லி இருக்கிறார்கள்.

இதே காங்கிரஸ் ஆட்சி இருந்த போது நாட்டின் வளங்களில் முஸ்லிம்களுக்குத்தான் முதல் உரிமை இருக்கிறது என்று சொன்னார்கள். அப்படியென்றால் இப்போது பறிமுதல் செய்யும் சொத்துக்களை யாருக்கு கொடுக்கப் போகிறார்கள்? நாட்டில் அதிகமாகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறவர்களுக்கு, நீங்கள் உழைத்து சம்பாதித்த வளத்தையெல்லாம் ஊடுருவல்காரர்களுக்குக் கொடுப்பதாகச் சொன்னார்கள். இதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?.

நம்முடைய தாய்மார்கள் சகோதரிகள் வைத்திருக்கும் தங்கத்தை எல்லாம் தேடி கணக்கெடுப்பு செய்து முஸ்லிம்களுக்கு கொடுக்கப் போகிறார்கள்; அவர்களுக்குத்தான் சொத்துக்களில் முதல் உரிமை இருக்கிறது என்று மன்மோகன் சிங் சொன்னார். இது நகர்ப்புற நக்சலைட்டின் மனோபாவம். எனது தாய்மார்களே! சகோதரிகளே! காங்கிரஸ் கட்சி உங்களுடைய தாலியைக் கூட விட்டு வைக்காது” என பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.

நமது அரசமைப்புச் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஒற்றுமை மதச் சார்பின்மை ஆகிய கோட்பாடுகளுக்கு நேர் எதிரான பேச்சாக மோடியின் பேச்சு அமைந்துள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக மத ரீதியான வன்முறையைத் தூண்டுவதுதான் அவர்களது நோக்கம் என்பது தெளிவாகத் தெரிகிறது. பிரதமர் மோடியின் பேச்சு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 123 (3a) இன் கீழ் குற்றமாகும். இந்தப் பேச்சு தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் மத்திய அரசால் வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கும் எதிரானதாகும்.

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153 ஏ, 154 பி, 298,504, 505 ஆகியவற்றின்படி இது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும். இந்திய நாட்டில் நேர்மையாகத் தேர்தல் நடத்த வேண்டுமென்றால் தேர்தல் ஆணையம் மோடி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை எவரும் மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x