Published : 23 Apr 2024 05:13 AM
Last Updated : 23 Apr 2024 05:13 AM
சென்னை: கனடாவில் நடைபெற்ற சர்வதேச செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழகத்தை சேர்ந்த செஸ் விளையாட்டு வீரர் குகேஷுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்:வியத்தகு சாதனை புரிந்துள்ள குகேஷுக்கு எனது பாராட்டுக்கள். வெறும் 17 வயதில் பிடே கேண்டிடேட்ஸ் தொடரின் மிக இளம்வயது ‘சேலஞ்சராக’ வரலாறு படைத்துள்ளார். பதின்பருவத்தில் இத்தகைய வெற்றி பெறும் முதல் வீரராக சாதித்துள்ளார். அடுத்து டிங் லிரன் உடனான உலக செஸ்சாம்பியன்ஷிப்புக்கான போட்டியிலும் அவர் வெற்றி வாகை சூட என்வாழ்த்துக்கள்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: 2024-ம் ஆண்டுக்கான கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற கிராண்ட் மாஸ்டர் குகேஷுக்கு எனது வாழ்த்துக்கள். விஸ்வநாத் ஆனந்துக்கு பிறகு, கேண்டிடேட் போட்டியில் வெற்றி பெற்ற 2-வது இந்திய வீரர் குகேஷ் ஆவார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்துக்காக டிங் லிரனுக்கு சவால் விடும் வகையில் அவர் தயாராகி வரும் நிலையில் அவருக்கு முழு ஆதரவையும் வழங்குவதில் தமிழகஅரசு பெருமிதம் கொள்கிறது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: 17 வயதில் செஸ் கேண்டிடேட்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று உலக சரித்திரம் படைத்த கிராண்ட் மாஸ்டர் குகேஷுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவரது உறுதியும் விடாமுயற்சியும் நம்தேசத்துக்கு பெருமை சேர்த்துள்ளது. குகேஷ், சதுரங்க உலகில் பெரிய இடத்தைப் பிடிக்க விரும்பும் அனைத்து இளம் திறமையாளர்களுக்கும் ஒரு உத்வேகமாக இருப்பார்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தமிழகத்தை சேர்ந்த குகேஷ் தமிழகத்துக்கு உலகஅளவில் பெருமை சேர்த்திருக்கிறார். கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு இளம் வயதில் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை புரிந்திருப்பது வரலாற்று சிறப்புக்குரியது. அவருக்கு எனது வாழ்த்துகள்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் குகேஷுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். அடுத்தடுத்து நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் வெற்றிவாகை சூட வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT