Published : 23 Apr 2024 05:07 AM
Last Updated : 23 Apr 2024 05:07 AM

39 மையங்களிலும் மின்னணு இயந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: மக்களவை தேர்தலில் வாக்குகள் பதிவான மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் 39 மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. 13 எல்லை மாவட்டங்களில் பறக்கும் படையினர், நிலை குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் அடங்கியஇயந்திரங்கள், அப்பகுதிகளில் உள்ள 39 வாக்கு எண்ணிக்கைமையங்களில் உள்ள 43 கட்டிடங்களில் வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 190 கம்பெனி துணை ராணுவ படையினரை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. தற்போது வாக்குப்பதிவு முடிந்த நிலையில், அதில் 15 கம்பெனியை மட்டும் ‘ஸ்டிராங் ரூம்’களின் பாதுகாப்புக்காக வைத்துவிட்டு, மற்றவர்கள் மற்ற மாநில தேர்தல் பாதுகாப்பு பணிக்கு சென்றுவிட்டனர்.

தேர்தல் ஆணைய வழிமுறைகளின்படி, வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஸ்டிராங் அறைகள், இரட்டை பூட்டுமுறை அடிப்படையில் பாதுகாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மையத்திலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் அதாவது, மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டிடத்தின் சுற்றுப்பகுதி, துணை ராணுவ படையினரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும். அதை சுற்றியுள்ள 2-வது அடுக்கில் மாநில ஆயுதப்படையினரும், வெளி அடுக்கில் மாநில போலீஸாரும் இருப்பார்கள்.

வாக்கு எண்ணிக்கை மையம்முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தினமும் சென்று ஸ்டிராங் அறைகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் தொகுதிகளுக்குள் இருந்த பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. அதேநேரம், தேர்தல் நடைபெற உள்ள ஆந்திரா,கேரளா, கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்களை ஒட்டி அமைந்துள்ள தமிழக எல்லையோர மாவட்டங்களில் மட்டும் இக்குழுவினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பறக்கும் படை, நிலை கண்காணிப்பு என கிருஷ்ணகிரியில் 8 குழு, வேலூர், சேலம், தேனியில் தலா 6, திருவள்ளூர், திருநெல்வேலியில் தலா 5, ஈரோடு, கன்னியாகுமரி, திருப்பத்தூரில் தலா 4, கோவையில் 3, நீலகிரி, திருப்பூர், தென்காசியில் தலா 2 என மொத்தம் 57 குழுக்கள் எல்லை பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த குழுவினர் 3 ஷிப்ட் அடிப்படையில் மொத்தம் 171 குழுக்கள் பணியில் இருக்கும்.

எல்லை பகுதியில் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம், தங்கம், மதுபானம், போதைப் பொருள், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றி உரிய அதிகாரிகளிடம் ஒப்படைப்பார்கள்.

வாக்குப்பதிவுக்கு அடுத்த நாளான ஏப்ரல் 20-ம் தேதி காலை நிலவரப்படி, பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் ரூ.84.70 கோடி, வருமான வரித் துறையினர் ரூ.95.07 கோடி என மொத்தம் ரூ.179.84 கோடி ரொக்கம், ரூ.7.91 கோடி மதிப்பில் மதுபானம், ரூ.1.17 கோடி மதிப்பிலான 4,881 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள், ரூ.1,083.78 கோடியில் 36,203 கிலோ தங்கம் உள்ளிட்ட உலோகங்கள், ரூ.35.80 கோடி மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் என மொத்தம் ரூ.1,308.52 கோடி பணம், பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதில், ரூ.950 கோடி மதிப்புள்ள 1,425 கிலோ தங்கம் உரிய ஆவணங்கள் அடிப்படையில் திருப்பி தரப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x