Published : 23 Apr 2024 06:55 AM
Last Updated : 23 Apr 2024 06:55 AM

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் 2,400 பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கினார் | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் பகுதியில் 2,400 பேரைமட்டுமே அனுமதிக்க வேண்டும் எனஉயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

சிவகங்கை மணிகண்டன், மதுரை ரமேஷ் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்தமனுவில், ‘‘மதுரையில் சித்திரை திருவிழாவில் போதுமான போலீஸ்பாதுகாப்பு வழங்கவும், நடமாடும் மருத்துவ சேவை, கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும்’’ எனவும் கூறியிருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் ஆகியோர் வைகை ஆற்றில் அழகர் இறங்கும் இடம் மற்றும் சித்திரை திருவிழா ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.

இந்த மனு நீதிபதிகள் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், சித்திரை திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தொடர்பான அறிக்கை தாக்கல்செய்யப்பட்டது. பின்னர் நீதிபதிகள் பல்வேறு உத்தரவுகளைப் பிறப் பித்தனர்.

அதில், சித்திரைத் திருவிழாவை அதிக கவனமாகவும், பாதுகாப்புடனும் நடத்த வேண்டும். அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக வைகை அணையிலிருந்து விநாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது நீதிமன்றம் அறிவுறுத்தியதால் 400 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை வசதிகள் முறையாக செய்யப்பட்டுள்ளன. தாழ்வாக செல்லும்மின்கம்பங்கள் உயர்த்தப்பட்டுள் ளன. அவசர மருத்துவ சிறப்பு முகாம்அமைக்கப்பட்டுள்ளது. அரசின் நடவடிக்கைகள் திருப்தி தருகின்றன.

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் இடம் சிறியது என்பதால் கோயில் நிர்வாகம் தரப்பில் பாஸ் வழங்கப்பட்ட 2,000 பேர், பேட்ஜ் அணிந்த 400 பேர் என மொத்தம் 2,400 பேரை மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ள பகுதிக்குள் அனுமதிக்க வேண்டும். அவர்கள் தங்களுடன் யாரையும் அழைத்துச் செல்லக் கூடாது. இந்த விஷயத்தில் காவல்துறை எந்த சமரசமும் செய்யக் கூடாது. இந்த உத்தரவை கடுமையாகப் பின்பற்ற வேண்டும்.

கள்ளழகரின் மீது தண்ணீர்பீய்ச்சும் நிகழ்வைப் பொறுத்தவரை, தோல் பைகளில் கைகளால் உருவாக்கப்படும் விசையைப் பயன்படுத்தி மட்டுமே தண்ணீரைப் பீய்ச்ச வேண்டும். சுத்தமான நீரைமட்டுமே பயன்படுத்த வேண்டும். அதைத் தவிர்த்து பிரஷர் பம்புகள்உள்ளிட்ட வேற ஏதேனும் இயந்திரங்களைப் பயன்படுத்தினாலோ, நிறமிகள், பால், மோர் போன்றவற்றை கலந்து தண்ணீரை பீய்ச்சினாலோ அவர்கள் மீது காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சித்திரை திருவிழாவை அதிக கவனம் மற்றும் பாதுகாப்புடன், அசம்பாவிதம் நிகழாதபடி நடத்த வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x