Published : 22 Apr 2024 06:32 PM
Last Updated : 22 Apr 2024 06:32 PM

திருப்பூரில் பெண்ணை தாக்கிய வழக்கில் பாஜகவினருக்கு முன்ஜாமீன் மறுப்பு

திருப்பூர்: வாக்குசேகரிப்பின் போது ஜிஎஸ்டி வரிவிதிப்பு தொடர்பாக கேள்வி எழுப்பிய பெண் மீது தாக்குதல் நடந்த விவகாரத்தில் பாஜகவினரின் முன்ஜாமீன் மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.பி.முருகானந்ததுக்கு ஆதரவு கோரி, திருப்பூர் அனுப்பர்பாளையம் ஆத்துப்பாளையத்தில் கடந்த 11-ம் தேதி வாக்கு சேகரிப்பு பணியில் பாஜகவினர் ஈடுபட்டிருந்தனர். அதே பகுதியில் கடை நடத்தி வரும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் சங்கீதா (37) துணிக்கடை மற்றும் தையல் நிலையத்துக்கு வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது சங்கீதா, 'பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் நாப்கினுக்கு ஜிஎஸ்டி வரி போட்டது குறித்து' பாஜகவினரிடம் கேட்டுள்ளார்.

தொடர்ந்து அங்கிருந்தவர்கள் சிலர், அரிசி விலையேற்றம், கியாஸ் சிலிண்டர் விலை ஏற்றம் குறித்து அடுத்தடுத்து கேள்வி எழுப்பினார்கள். இதில் ஆத்திரம் அடைந்த பாஜகவினர் பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சங்கீதா கடைக்குள் வந்துவிட்டார். சிறிதுநேரம் கழித்து 20-க்கும் மேற்பட்ட பாஜகவினர் சங்கீதாவின் கடைக்குச் சென்றுள்ளனர். அப்போது நீ யார் எங்களிடம் கேள்வி கேட்க? எனக் கூறி தகாத வார்த்தையில் பேசி தாக்கி உள்ளனர். இதனை சங்கீதா அலைபேசியில் வீடியோவாக எடுத்துள்ளார். அவரிடம் இருந்து அலைபேசியை பறிக்கும்போது லேசான தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு சலசலப்பு எழுந்தது. அருகில் இருந்தவர்கள் வந்து சமாதானம் செய்தனர்.

இது தொடர்பாக சங்கீதா 15 வேலம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பாஜகவைச் சேர்ந்த சின்னசாமி உள்ளிட்டோர் மீது 15 வேலம்பாளையம் போலீஸார் வழக்கு பதிந்தனர். இது தொடர்பாக தேர்தல் பிரச்சாரத்துக்கு திருப்பூர் வந்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பரப்புரையில் கண்டனம் தெரிவித்தார்.

இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிந்திருந்த நிலையில் பாஜகவைச் சேர்ந்த சீனிவாசன், சின்னசாமி மற்றும் ரவிக்குமார் ஆகியோர் முன்ஜாமீன் கோரி, திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இன்று இது தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடந்தது. அதில் பொது இடத்தில் கெட்ட வார்த்தை பேசுதல், சிறு காயங்கள் ஏற்படுத்துதல் மற்றும் பெண்களை இழிவுபடுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இருதரப்புக்கு இடையே மதம் அல்லது சாதியின் பெயரில் வன்முறையைத் தூண்டிய 153 (ஏ) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யவும் நீதிபதியிடம் கோரப்பட்டது.

முறையாக புலன் விசாரணை செய்யாமல் இருந்தது தொடர்பான உள்ளிட்ட விஷயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. மேலும், முன்ஜாமீன் கோரி 3 ஆகியோரின் முன் ஜாமீன் மனுக்களை திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஸ்வர்ணம் ஜெ.நடராஜன் தள்ளுபடி செய்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x