Published : 22 Apr 2024 02:14 PM
Last Updated : 22 Apr 2024 02:14 PM
சென்னை: பிரதமர் மோடியின் ராஜஸ்தான் பேச்சுக்கு எதிர்க்கட்சி கண்டனம் தெரிவித்து வருகின்றன. வெறுப்புப் பேச்சு என காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்திலும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி பேசியதை பகிர்ந்து, "தேர்தல் ஆணையத்துக்கு இரங்கல்" என்று பதிவிட்டுள்ளார். அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பாஜகவின் தேர்தல் அத்துமீறல்களை தொடர்ந்து பதிவிட்டு வரும் நிலையில், தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பதை உணர்ந்தும் விதமாக "தேர்தல் ஆணையத்துக்கு இரங்கல்" என்று பதிவிட்டுள்ளார்.
இதேபோல், மனிதநேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள கண்டன பதிவில், "ஒரு மூன்றாம் தரப் பேச்சாளரைப் போல ஒரு நாட்டின் பிரதமர் பேசியிருப்பது இந்திய நாட்டையே உலக அரங்கில் வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது. இதுவரை இந்தியாவில் ஆட்சி செய்த பிரதமர்கள் யாருமே இது போன்ற தரங்கெட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டதில்லை.
தேர்தல் நடத்தை விதிமுறைகளின் அடிப்படையில் மத வெறுப்பு பரப்புரை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. ஒரு பிரதமராக இவர் தேர்தல் நடத்தை விதிமுறையையும் பின்பற்றவில்லை. நாட்டின் இறையாண்மை மற்றும் அரசியல் சாசனத்தின் சாராம்சத்தையும் மதிக்கவில்லை. ஒருபோதும் சிறுபான்மையினருக்கு எதிராக நாங்கள் இல்லை என்று ஊடகத்தில் விளம்பரம் செய்துவிட்டு அப்பட்டமாக மதவெறுப்பு பரப்புரையை ஒரு பிரதமரே செய்திருப்பது அக்கட்சியின் அருவறுப்பான சந்தர்ப்பவாதத்தை மக்களுக்கு உணர்த்தி உள்ளது.
அவர் மீது இந்திய தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுத்து தனது நடுவுநிலையை நிரூபிக்க வேண்டும். இதை இந்தியத் தேர்தல் ஆணையம் மௌனமாகக் கடந்து போனால் அதன் நம்பகத்தன்மை உலக அரங்கில் கேள்விக்குறியாகிவிடும்" என்று பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி பேசியது என்ன? - ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடந்த கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மக்களிடம் உள்ள தங்கம் மற்றும் சொத்துகள் எல்லாவற்றையும் பறித்து ஊடுருவல்காரர்களுக்கு கொடுத்துவிடும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொருவரின் சொத்துகள் கணக்கிடப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் என்ன சொன்னார்... “நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை” என்றார். அப்படியானால் யாருடைய சொத்துகளை பறித்து யாரிடம் கொடுப்பீர்கள்?! சொத்துகள் ஊடுருவல்காரர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என்பதே அதன் பொருள்.
நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம், ஊடுருவல்காரர்களுக்கே போக வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? நம் பெண்கள் எவ்வளவு தங்கம் மற்றும் வெள்ளி வைத்திருக்கிறார்கள் என்பதை காங்கிரஸ் கணக்கிடும். தங்கம் ஒரு பெண்ணின் சுயமரியாதை. ஒரு பெண்ணின் தாலியின் மதிப்பு தங்கத்தின் விலையில் மட்டுமல்ல, அவர்களின் கனவுகளுடன் தொடர்புடையது. ஒரு பெண்ணின் தாலியை பறிப்பதற்கு எந்த அரசுக்கும் அதிகாரம் கிடையாது" என்று ஆவேசமாக கூறினார். இதனை ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் கடுமையாக கண்டித்துள்ளது. அதன் விவரம்: “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்...” - மோடியின் பேச்சும், ராகுல் காந்தி எதிர்வினையும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT