Published : 22 Apr 2024 04:06 AM
Last Updated : 22 Apr 2024 04:06 AM
ஓசூர்: அஞ்செட்டி அருகே 5-க்கும் மேற்பட்ட மலைக் கிராம மக்கள் செல்போன் சிக்னல் கிடைக்காமல், தகவல் பரிமாற்றத்துக்கு சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியைச் சுற்றி 100-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் சாலை, குடிநீர், மருத்துவமனை உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி மக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
அடர்ந்த வனப்பகுதி: இதில், அஞ்செட்டியிலிருந்து 12 கிமீ தொலைவில் உள்ள தக்கட்டி, தொட்டியூர், ஓதிபுரம், அர்த்தக்கல் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் கர்நாடக மாநில எல்லையை ஒட்டிய அடர்ந்த வனப்பகுதிக்குள் உள்ளன. இங்கு சுமார் 700-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களின் தொலைத் தொடர்பு வசதிக்காக ஓதிபுரத்தில் பிஎஸ்என்எல் செல்போன் கோபுரம் அமைக்கப் பட்டுள்ளது. இருப்பினும் இக்கிராமங்களுக்கு செல்போன் சிக்னல் முறையாகக் கிடைப்பதில்லை என மலைக் கிராம மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இருக்கு..ஆனா இல்ல...: இது தொடர்பாக தக்கட்டியைச் சேர்ந்த வெற்றி கூறியதாவது: எங்கள் கிராமத்தில் பிஎஸ்என்எல் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டாலும், சீராக சிக்னல் கிடைப்பதில்லை. மேலும், மழை, காற்று வந்தால், மின்சாரம் துண்டிக்கப்பட்டு செல்போன் சிக்னல் பல நாட்கள் கிடைக்காத நிலையுள்ளது. இதனால், நகரப்பகுதியில் உள்ள எங்கள் உறவினர்கள் மற்றும் படிப்புக்காக வெளியூர்களில் தங்கியிருக்கும் எங்கள் குழந்தைகளுடன் பேச முடியாத நிலையுள்ளது.
குறிப்பாக, மலைக் கிராமங்களில் அடிக்கடி விஷ ஜந்துகள் தீண்டிப் பாதிப்பு ஏற்படும்போது, பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிக்கவும், கர்ப்பிணிகளை பிரசவத்துக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும் ஆம்புலன்ஸ் வாகனத்தை தொடர்பு கொள்ள முடியாத நிலையுள்ளது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் மற்றும்வேறு சந்தேகங்களை ஆன்லைன் மூலம் அறிந்து கொள்ள முடிவதில்லை. இதனால், செல்போன் சிக்னல் முறையாகக் கிடைக்கும் உரிகம் சாலையில் சுமார் 2 கிமீ சென்று பேசிவிட்டு திரும்பும் நிலையுள்ளது.
பேருந்து வசதியும் இல்லை: மேலும், அஞ்செட்டியிலிருந்து எங்கள் கிராமங்களுக்குக் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பேருந்து வசதிகள் உள்ளன. இதனால், வெளியூர் பள்ளி, கல்லூரிக்குச் சென்று திரும்பும் மாணவ, மாணவிகள் மற்றும் பல்வேறு பணிகளுக்குச் சென்று விட்டு இரவு கிராமத்துக்கு பேருந்து கிடைக்காமல் வரமுடியாதவர்கள் எங்களை செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவிக்க முடியாமல் பரிதவிக்கும் நிலையுள்ளது.
தகவல் பரிமாற்றத்துக்கு வழியிருந்தால், பேருந்து கிடைக் காதவர்களை அஞ்செட்டியிலிருந்து இருசக்கர வாகனங்களில் அழைத்து வர முடியும். இணைய வசதி உள்ள பகுதிகள் பல்வேறு நிலைகளில் வளர்ந்து வரும் நிலையில், எங்களின் அடிப்படைத் தகவல் பரிமாற்றத்துக்குக் கூட வழி கிடைக்காமல் பரிதவிக்கும் நிலையுள்ளது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, மலைக் கிராமங்களுக்கு பிஎஸ்என்எல் மூலம் தடையின்றி செல்போன் சிக்னல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT