Published : 22 Apr 2024 08:00 AM
Last Updated : 22 Apr 2024 08:00 AM

சென்னையில் மட்டும் தொடர்ந்து குறையும் வாக்குப்பதிவு: மக்களிடையே ஆர்வமின்மை காரணமா?

சென்னை: சென்னையில் தொடர்ந்து மக்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டாததற்கு, ஆர்வமின்மை மட்டுமின்றி பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னை பெருநகரங்களில் ஒன்று. மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து மட்டுமின்றி, நாட்டின் பிற பகுதிகளிலும் இருந்து வந்து குடியேறிய மக்கள் வாழும் பகுதி.

அன்றாடம் வந்து செல்லும் மக்கள் தொகை அதிகம் கொண்ட மாவட்டம் சென்னை. ஆனால், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், குறைவான வாக்குகள் பதிவான தொகுதிகள் கொண்ட மாவட்டமாக சென்னை உள்ளது. இந்த தேர்தலில் மட்டுமல்ல; கடந்த சில மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்களிலும் இதே நிலைதான்.

தேர்தல் பெரும்பாலும் அனல் பறக்கும் கோடை காலத்தில்தான் நடத்தப்படுகிறது. கோடை வெப்பம் காரணமாக மக்கள் வெளியில் வரவில்லை என்பது பொதுவான காரணம். அதையும் தாண்டி, வேறு சில காரணங்கள் இருக்கத்தான் செய்கிறது.

சென்னையில் 3 மக்களவைத் தொகுதிகள், 18 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. 3 தொகுதிகளிலும் சேர்த்து மொத்த வாக்காளர் எண்ணிக்கை 48.69 லட்சத்தை தாண்டுகிறது.

ஆனால், இம்முறை வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 27.13 லட்சம் பேர்தான். ஒட்டுமொத்த தமிழகம்போல், இந்த 3 தொகுதிகளிலும் ஆண்களைவிட பெண் வாக்காளர்கள் அதிகம். ஆனால், வாக்களித்தவர்களில் பெண்களைவிட ஆண் வாக்காளர்கள் அதிகம்.

வாக்குப்பதிவு நடைபெற்ற ஏப்.19-ம் தேதி காலையில் வாக்குச்சாவடிகளில் அதிகளவில் வாக்காளர்கள் வரிசை கட்டி நிற்பதை பார்க்க முடிந்தது. அதன்பிறகு வாக்குப்பதிவு முடியும் நேரத்தில் வாக்காளர்கள் அதிகம் நின்றிருந்தனர்.

ஆனால், இடைப்பட்ட நேரத்தில், ஒருசில வாக்குச்சாவடிகளை தவிர மற்ற இடங்களில் வாக்காளர்கள் இன்றி வாக்குச்சாவடிகள் வெறிச்சோடிதான் காணப்பட்டன. சென்னையின் 3 மக்களவைத் தொகுதிகளை பொறுத்தவரை, வடசென்னையில் வாக்குப்பதிவு கடந்த 3 மக்களவை தேர்தல்களையும் ஒப்புநோக்கும் போது ஒரே மாதிரியாக 64 சதவீதத்துக்கும் அதிகமாகவே உள்ளது.

ஆனால் இந்த தேர்தலில் 60.11 சதவீதமாக குறைந்துவிட்டது. உழைக்கும் மக்கள் அதிகம் உள்ள இப்பகுதியில், வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இருந்தாலும் வாக்குப்பதிவு குறைந்துள்ளது.

ஆனால், படித்த வாக்காளர்கள் அதிகம்உள்ள தென்சென்னையில், கடந்த 3 தேர்தல்களாகவே வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தே வந்துள்ளது. இம்முறை அதை விடவும் குறைந்து 54.17 சதவீதமாக பதிவாகியுள்ளது. படித்தவர்கள் அதிகளவில் வாழும் தென்சென்னை தொகுதியில், இம்முறை 54.17 சதவீதம் பேரே வாக்களித்துள்ளனர்.

பெரும்பாலும் வெளியூர்களைச் சேர்ந்த மக்கள் அதிகளவில் வசிக்கும் இந்த தொகுதியில், பலரும் விடுமுறையை பயன்படுத்தி சொந்த ஊர்களுக்கு சென்றிருக்கலாம் என்பதே காரணமாகக் கூறப்படுகிறது.

மத்திய சென்னை தொகுதி, வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்புகள் நிறைந்த பகுதி என்றாலும், மக்கள் தொகை 13.05 லட்சம்தான். இதில் 7.28 லட்சம் அதாவது 53.96 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். கடந்த 2009, 2014 தேர்தல்களில் இத்தொகுதியில் 61 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகள் பதிவான நிலையில், 2019-ல் குறைந்து 58.95 சதவீதமானது. இந்த தேர்தலில் மேலும் குறைந்துள்ளது.

முன்னதாக, தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி சென்னையின் 3 தொகுதிகளிலும் மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டின் பேரில், தொகுதிமக்களுக்கு பல்வேறு வகைகளில் வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தி விழிப்புணர்வுஏற்படுத்தப்பட்டது.

இளம் வாக்காளர்களை கவரும் வகையில், இம்முறை வாக்குச்சாவடிகளில் செல்ஃபி பாய்ன்ட் ஏற்பாடு செய்யப்பட்டது. இருப்பினும் வாக்குப்பதிவு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக வாக்குப்பதிவு குறைவதற்கு வேறு சில காரணங்களும் வாக்காளர்களால் முன்வைக்கப்படுகிறது. இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ‘‘வெளியூரில் இருந்து இங்கு வந்து வசிப்பவர்கள், வாடகை வீடுகளை அவ்வப்போது மாற்ற வேண்டியுள்ளது.

அவ்வாறு மாறும்போது, குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றுடன் வாக்காளர் அடையாள அட்டையிலும் முகவரியை மாற்ற வேண்டும். அப்போதுதான் வசிக்கும் இடத்தில் வாக்கு செலுத்த முடியும். மாற்றாத பட்சத்தில் ஆயிரக்கணக்கில் செலவழித்துதான் வாக்களிக்க செல்ல வேண்டியுள்ளது.

இதுதவிர, தேர்தல்ஆணையம் வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு செயலி, இணையதளம், சிறப்பு முகாம்கள் என பல வசதிகளை அளித்தாலும், முறையான ஆவணங்கள் யாரிடமும் இருப்பதில்லை. இதனால், முகவரி மாற்றம் செய்ய இயலாமல் போகிறது.

இப்போது அனைத்து தரவுகளுடனும் ஆதார் இணைக்கப்பட்டுள்ள நிலையில், ஆதாரில் பெயர் மாற்றப்பட்டால், மற்ற வங்கிக் கணக்குகள், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டையிலும் தானாகவே முகவரி மாற்றம் நடைபெறும் வகையில் வசதி செய்ய வேண்டும்’’ என்றனர்.

அதே நேரம், தற்போது நடைபெற்று முடிந்துள்ள மக்களவைத் தேர்தலை பொறுத்தவரை, கிராமங்களை உள்ளடக்கிய தொகுதிகளில் வாக்குப்பதிவு சதவீதம் 70 சதவீதத்துக்கும் மேலாகவே உள்ளது. ஆனால், நகர்ப்புறங்களில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளதை காண முடியும்.

பழங்குடியினர் கல்வியறிவில் முன்னேறாவிட்டாலும், பல கி.மீ. நடந்து வந்தும், பரிசல்களில் ஆற்றை, அணையை கடந்தும் வந்துதங்களின் ஜனநாயக கடமையை ஆற்றும்போது, படித்தவர்கள் அதிகம் உள்ள நகரப் பகுதிகளில் வாக்களிப்பதை தவிர்ப்பதுஎன்பது நமது உரிமையை விட்டுக் கொடுப்பதாகவே அர்த்தமாகும். அதே நேரம், தேர்தல் ஆணையமும் காரணங்களை கண்டறிந்து அவற்றை சரிசெய்ய முயல வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x