Published : 22 Apr 2024 04:12 AM
Last Updated : 22 Apr 2024 04:12 AM
மதுரை: மதுரை அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேலின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது. டீன் பதவியை பிடிக்க பேராசிரியர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் சிகிச்சை வசதிகளில் மாநிலத்திலேயே 2-வது மிகப்பெரிய மருத்துவமனையாக உள்ளது. மதுரை மட்டுமின்றி தென் மாவட்டங்களிலிருந்தும் ஏராளமானோர் சிகிச்சை பெற வருகின்றனர். நாள் ஒன்றுக்கு சராசரியாக 9 ஆயிரம் வெளி நோயாளிகள், 3 ஆயிரம் உள் நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். இந்த மருத்துவமனையுடன் இணைந்த அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் மாணவர்கள் மற்றும் சிறப்பு துறை பட்ட மேற்படிப்பு மாணவர்கள் ஏராளமானோர் படித்து வருகின்றனர்.
கோரிப்பாளையத்தில் முதன்மைக் கட்டிடம், அண்ணா பேருந்து நிலையம் அருகில் விபத்து காயம் அவசர சிகிச்சைப் பிரிவு, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, பாலரெங்காபுரம் மருத்துவமனை, தோப்பூர் நெஞ்சக நோய் மருத்துவமனை ஆகியவற்றை நிர்வகிக்கும் பெரும் பொறுப்பு டீனுக்குத் தான் உண்டு. தற்போது இந்த மருத்துவ மனையின் டீனாக ரத்தினவேல் உள்ளார். கரோனா 2-வது அலை பரவிய போது சிவகங்கை அரசு மருத்துவமனை டீனாக இருந்த இவரை, மதுரை அரசு மருத்துவமனைக்கு அரசு பணியிட மாற்றம் செய்தது.
இவர், டீனாக வருவதற்கு முன்பு ஏற்கெனவே மதுரை அரசு மருத்துவமனையில் நீண்ட காலமாக இருதய அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றியுள்ளார். இதனால், டீனாக பொறுப்பேற்றதும் இந்த மருத்துவமனையின் நிறை, குறைகளை எளிதாகக் கண்டறிந்து உடனுக்குடன் தீர்வு கண்டார். இது நோயாளிகளிடையே வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், டீன் ரத்தின வேலின் பதவிக் காலம் ஏப்ரல் மாதத்தோடு நிறைவு பெறுகிறது. சென்னை அரசு மருத்துவமனை டீன் பதவிக்கு அடுத்த படியாக மதுரை அரசு மருத்துவமனை டீன் பதவி அதிகாரமிக்க பதவி என்பதால் இப்பதவியைப் பிடிக்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக டீனாக பொறுப்பேற்க தகுதியுள்ள மூத்த பேராசிரியர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. மருத்துவமனையில் நிலவும் பிரச்சினைகளை சரி செய்யும் வகையிலும், கிடப்பில் உள்ள திட்டங்களை செயல்படுத்தும் வகையிலும் திறமையானவர்களை டீனாக அரசு நியமிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இது குறித்து மதுரை கே.கே. நகரைச் சேர்ந்த சுகாதார உரிமை சமூக செயற்பாட்டாளர் ஆனந்த ராஜ் கூறுகையில், மதுரை அரசு மருத்துவமனை டீன் நியமனத்தில் அரசியல்வாதிகள் பரிந்துரை இருக்கக் கூடாது. பிற அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிறப்பாகப் பணிபுரிந்து அனுபவமும் திறமையும் மிக்கவர்களை மதுரை அரசு மருத்துவமனை டீனாக நியமிக்க வேண்டும் என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT