Published : 21 Apr 2024 01:24 PM
Last Updated : 21 Apr 2024 01:24 PM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் தற்போது நடைபெற்ற தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது ஏன் என தேர்தல் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக மாவட்ட நிர்வாகம், பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டது. மேலும், வாக்குப் பதிவு குறையாமல் இருக்க வேண்டும் என்பதால், 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் அவரவர் வீட்டிலிருந்தபடியே வாக்களிக்க அஞ்சல் வாக்குப் பதிவையும் தேர்தல் ஆணையம் செயல்படுத்தியது. தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க அதிகாரிகள் முழுவீச்சில் செயல்பட்டனர்.
ஆனாலும், நேற்று முன்தினம் நடைபெற்ற வாக்குப்பதிவில், தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் 68.18 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி யுள்ளன. 2019-ம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் வாக்குப்பதிவு 72.5 சதவீதமாக இருந்த நிலையில், இந்த முறை 4.32 சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது. இதேபோல, 2014-ம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 75.57 சதவீதமாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் 7.39 சதவீதம் வாக்குப்பதிவு குறைந்துள்ளது.
இந்த தேர்தலில் வாக்குப் பதிவு குறைய காரணம் என்ன என்பது தொடர்பாக அரசுத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியது: தேர்தல் நாள் வெள்ளிக் கிழமையில் வந்ததால், சனி, ஞாயிறு தொடர் விடுமுறை என சிலர் கோயில், சுற்றுலா போன்ற இடங்களுக்கு சென்று விட்டனர். இதே போல, மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெரும்பாலும் குக்கிராமங்களுக்கு செல்லாமல் நகரம், பேரூராட்சி, முதன்மை கிராமங்களில் மட்டுமே பிரச்சாரம் செய்ததால், குக்கிராமங்களில் உள்ளவர்கள் எங்கள் பகுதிக்கு யாரும் வாக்கு கேட்க வரவில்லை என அதிருப்தி அடைந்து வாக்களிக்காமல் இருந்திருக்கலாம்.
மேலும், தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் தேர்தல் புறக்கணிப்பு என்பது இல்லை. ஆனால், இந்த முறை இனாத்துக்கான் பட்டி, பின்னையூர் போன்ற இடங்களில் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டு, வாக்களிக்காமல் இருந்தனர். இதேபோல, வேட்பாளர்களின் வாக்குறுதிகள் மீது நம்பிக்கை இழந்த நகர வாக்காளர்கள், அரசியல் கட்சிகள் மீது வெறுப்புற்ற வாக்காளர்களும் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை. இதுதவிர, தேர்தல் நாளான நேற்று முன்தினம் தஞ்சாவூர் பகுதியில் வெயிலின் தாக்கம் 104 டிகிரியாக இருந்ததால், பொதுமக்கள் வெளியே வராமல் தவிர்த்திருக்கலாம். இதுபோன்று பல காரணங்கள் இருந்தாலும், கடந்த 10 ஆண்டுகளில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது ஏன் என அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் என தெரிவித்தனர்.
சட்டப்பேரவை தொகுதி வாரியாக...: தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தலில் 68.18 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், சட்டப்பேரவைத் தொகுதிவாரியாக பதிவான வாக்கு சதவீதம்: மன்னார்குடி- 67.61, திருவையாறு- 71.92, தஞ்சாவூர்- 62.01, ஒரத்தநாடு- 68.89, பட்டுக்கோட்டை- 67.14, பேராவூரணி- 72.41.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT