Published : 21 Apr 2024 01:39 PM
Last Updated : 21 Apr 2024 01:39 PM

‘‘தேர்தல் ஆணையம் விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை’’ - வாக்குப்பதிவு குறைவுக்கு பிரேமலதா குற்றச்சாட்டு

சென்னை: "தேர்தல் ஆணையம் நூறு சதவீதம் ஓட்டு செலுத்தவேண்டும் என்று விளம்பரம் செய்தாலும், மக்களுக்கு பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை என்பது தெளிவாக தெரிகிறது." என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், "நடந்து முடிந்த 2024 பாராளுமன்ற தேர்தலில் ஒரு கோடியே 90 லட்சம் பேர் வாக்களிக்காதது மத்திய, மாநில அரசுகளின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டார்களோ என எண்ணத்தோன்றுவதாக உள்ளது.

சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க வேண்டும் என்ற நிலையில் இருப்பவர்களுக்கு, பஸ் கட்டணம், ரயில் கட்டணம் மற்றும் அனைத்து போக்குவரத்து கட்டணங்கள் அதிகமாக இருப்பதனால் செலவு செய்து ஓட்டு போடனுமா என்கின்ற மனநிலைக்கு மக்கள் வந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தில் தான் தேர்தல் வருகிறது. எனவே வெயிலின் தாக்கம் அதிகம் என்கிற காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

தேர்தல் ஆணையம் நூறு சதவீதம் ஓட்டு செலுத்தவேண்டும் என்று விளம்பரம் செய்தாலும், மக்களுக்கு பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. இதில் முக்கியமாக சென்னை போன்ற மாநகரங்களில் வசதியானவர்கள், படித்தவர்கள், அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்கள் வாக்களிப்பதை பெருமளவில் விரும்புவதில்லை என்பது வேதனையளிக்கிறது.

நாம் யாருக்கு ஓட்டுப் போட்டா என்ன?, என்ன மாற்றம் வரப்போகிறது என்கிற மனநிலைக்கு மக்கள் தள்ளப்படுகிறார்களா என்பது ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது. ஏற்கனவே வெற்றி பெற்றவர்களும் தொகுதி பக்கம் அதிகம் செல்வதில்லை, தொகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதில்லை, அதுமட்டுமல்லாமல் இன்றைக்கு நிலவுகின்ற வேலையின்மை, வறுமை, அன்றாட பிரச்சினைகளை தீர்ப்பதற்குக் கூட ஆளில்லை. யாருக்கு ஓட்டுப் போட்டா என்ன என்ற மக்களின் வேதனையான மனநிலையை தான் நிரூபிக்கிறது.

இதெல்லாம் மாறவேண்டும் என்றால் மத்திய, மாநில ஆட்சியில் இருப்பவர்கள் மக்களின் பிரச்சனைகளுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாகும். ஆனால் ஆளும் ஆட்சியாளர்களோ ஓட்டுக்கு காசு கொடுத்தும், ஒட்டு மொத்த மீடியாவையும் பயன்படுத்தி வெற்றி பெற்றுவிடலாம் என்கின்ற போக்கில் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

எனவே மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றனும், வாக்களித்த மக்களை நேரடியாக சந்திக்கனும் என்கிற பாடத்தை இந்த தேர்தல் மூலம் கற்றுள்ளனர். எனவே தேர்தல் ஆணையமும், காவல்துறையும், நீதித்துறையும், ஆட்சியாளர்களும் வாக்களிப்பதின் அவசியத்தையும், நம்பிக்கையையும் மக்களுக்கு இனிவரும் காலங்களில் உறுதியாக ஏற்படுத்தவேண்டும் என தெரிவித்துக்கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x