Published : 21 Apr 2024 12:05 PM
Last Updated : 21 Apr 2024 12:05 PM

“கஞ்சா வணிகரை பிடிக்கச் சென்ற காவலர்கள் மீது தாக்குதல்” - தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்

அன்புமணி ராமதாஸ்

சென்னை: கஞ்சா வணிகரை பிடிக்கச் சென்ற காவலர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு இனியாவது விழித்துக் கொண்டு போதைப் பொருட்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னை கண்ணகி நகரில் உமாபதி என்ற கஞ்சா வணிகரை கைது செய்வதற்காக சென்ற இரு காவலர்களை கஞ்சா போதையில் இருந்த உமாபதியும், அவரது நண்பரும் இணைந்து கண்மூடித்தனமாக தாக்கியதில் இரு காவலர்களும் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவம் பெற்று வருகின்றனர்.

அதேபோல், கும்பகோணம் பாலக்கரையில் கஞ்சா போதையில் இருந்த 8 பேர் கொண்ட கும்பல் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரையும், அதை படம் பிடித்த இரு செய்தியாளர்களையும் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். கஞ்சா அடிமைகளால் காவல்துறையினர், போக்குவரத்துத் தொழிலாளர்கள், செய்தியாளர்கள், பொதுமக்கள் என எந்தத் தரப்பினருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டிருப்பது பெரும் கவலையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.

கண்ணகி நகரைச் சேர்ந்த உமாபதி கஞ்சா வணிகம் செய்வதையே முழு நேரத் தொழிலாகக் கொண்டவர். இதற்காக பல முறை கைது செய்யப்பட்ட போதிலும் உடனடியாக விடுதலை செய்யப்பட்டு விடுவதால் அவருக்கு சட்டத்தின் மீது எந்த அச்சமும் இல்லை.

அவர் கஞ்சா வணிகம் செய்வது குறித்து காவல்துறையினருக்கு புகார் அளித்த இருவரைப் பற்றிய விவரங்களை காவல்துறையினரிடமிருந்து பெற்ற உமாபதி அவர்கள் இருவரையும் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சித்துள்ளார். அவர்களும் ஆபத்தான நிலையில் மருத்துவம் பெற்று வருகின்றனர். இது குறித்த வழக்கில் கைது செய்யச் சென்ற போது தான் காவலர்களை அவர் தாக்கியுள்ளார்.

உமாபதி உள்ளிட்ட கஞ்சா வணிகர்கள் மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையானவர்கள் ஆகியோரைக் கண்டு அஞ்சி நடுங்குவதாக கண்ணகி நகர் மக்கள் தெரிவித்துள்ளனர். கண்ணகி நகர் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் இதே நிலை தான் காணப்படுகிறது. மது போதையைக் கடந்து கஞ்சா போதைக்கு சிறுவர்கள் கூட அடிமையாகிக் கிடக்கின்றனர்.

பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கூட கஞ்சா போதையில் செல்வதும், அதைக் கண்டித்து எச்சரிக்கும் ஆசிரியர்களைத் தாக்குவதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. கஞ்சா போதைக்கு செல்லாமல் இளைய தலைமுறையினரைத் தடுப்பதும், போதைக்கு அடிமையாவதைத் தடுப்பதும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன.

சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் கஞ்சா, அபின், ஹெராயின், கோகைன், எல்எஸ்டி என, அனைத்து வகையான போதைப் பொருட்களும் கிடைக்கின்றன. 24 மணி நேரம் வரை போதையில் மிதக்க வைக்கும் போதைப்பொருட்கள் கூட சென்னையில் தாராளமாகக் கிடைக்கின்றன.

தமிழகத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டமும், கடத்தலும் கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகின்றன. உலக அளவிலான போதைப் பொருட்கள் பயன்பாடு மற்றும் கடத்தல் மையமாக தமிழகம் மாறி வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

தமிழகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டமும், பயன்பாடும் அதிகரித்து வருவது குறித்தும், அவற்றை ஒழிக்க வேண்டியதன் தேவை குறித்தும் பல ஆண்டுகளாகவே வலியுறுத்தி வருகிறேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்த போதும் போதைப் பொருட்களை கட்டுப்படுத்தும்படி வலியுறுத்தினேன்.

ஆனால், போதைப் பொருட்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. அதன் விளைவு தான் தமிழகத்தில் போதைப்பொருட்கள் தலைவிரித்தாடுகின்றன.

தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரிக்கும் போதெல்லாம் கஞ்சா வேட்டை என்ற பெயரில் காவல்துறையினர் சில ஆயிரம் பேரை கைது செய்வார்கள். ஆனால், அடுத்த நாளே அவர்கள் வெளியில் வந்து மீண்டும் கஞ்சா வணிகத்தைத் தொடங்கி விடுவார்கள்.

ஆட்சியாளர்கள் மற்றும் காவல்துறையினரின் மறைமுக ஆதரவுடன் தான் தமிழ்நாட்டில் கஞ்சா வணிகம் நடைபெறுகிறது என்று வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டுகிறேன். தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படா விட்டால், இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என்பதே உண்மை.

தமிழ்நாடு இன்று எதிர்கொள்ளும் மிக முக்கிய பிரச்சினையே போதைப் பொருட்கள் நடமாட்டமும், அதனால் இளைஞர்கள் சீரழிவதும் தான். தமிழ்நாடு அரசு இனியாவது விழித்துக் கொண்டு போதைப் பொருட்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; தமிழகத்தை போதையில்லாத மாநிலமாக மாற்ற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x