Published : 21 Apr 2024 05:21 AM
Last Updated : 21 Apr 2024 05:21 AM
சென்னை: தமிழகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 39 வாக்கு எண்ணும் மையங்களுக்கும் 4 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அப்பகுதிகள் முழுவதும் தலா 188 சிசிடிவி கேரமாக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு 39 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து வாக்குகள் பதிவான அனைத்து இயந்திரங்களும் ஏற்கெனவே தயார்படுத்தப்பட்ட 39 வாக்கு எண்ணும் மையங்களுக்கும் நேற்று முன்தினம் இரவே பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.
அவற்றை பாதுகாப்பு அறைகளில் வைத்து சீலிடும் பணிகள் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தொகுதி பொது பார்வையாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.
சென்னையில் மத்திய சென்னை தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் லயோலா கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் நேற்று வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இப்பணிகளை மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன், தேர்தல் பொது பார்வையாளர் டி.சுரேஷ், தேர்தல் நடத்தும் அலுவலர் கே.ஜெ.பிரவீன் குமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
சென்னையில் உள்ள 3 வாக்குச்சாவடிகளுக்கும் தலா 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் மத்திய ஆயுதப் படையினரும், 2-வது அடுக்கில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரும், 3-வது அடுக்கில் சென்னை ஆயுதப்படையினரும், 4-வது அடுக்கில் சென்னை காவல் சட்டம் மற்றும் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, சிறப்பு பிரிவுகளைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள 3 மையங்களில் 1,095 போலீஸார் மற்றும் 24 மாநகராட்சி பணியாளர்கள் மூலம் 3 சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. மேலும் ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் தலா 188 சிசிடிவி கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இம்மையங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் நேற்று ஆய்வு செய்தார். அப்போது பாதுகாப்பு தொடர்பாக போலீஸாருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
இதேபோன்று தமிழகம் முழுவதும் உள்ள 39 வாக்கு எண்ணும் மையங்களிலும் 4 அடுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிசிடிவி கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT