Published : 21 Apr 2024 05:11 AM
Last Updated : 21 Apr 2024 05:11 AM

தமிழகத்தில் 69.46% வாக்கு பதிவு: முந்தைய மக்களவை தேர்தலை காட்டிலும் 3 சதவீதம் குறைவு

சத்யபிரத சாஹூ

சென்னை: மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 69.46 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் 72 சதவீதம் பதிவானதாக அறிவித்திருந்த நிலையில், வாக்குப்பதிவு தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் மாறுபட்ட அறிவிப்பால் அரசியல் கட்சிகள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகளில் 76 மகளிர் உட்பட 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் 3 கோடியே 6 லட்சம் ஆண் வாக்காளர்கள், 3 கோடியே 17 லட்சம் பெண் வாக்காளர்கள், 8 ஆயிரத்து 467 இதர வாக்காளர்கள் என மொத்தம் 6 கோடியே 23 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில் 10 லட்சத்து 92 ஆயிரம் முதல்முறை வாக்களிக்க இருப்போர், 4 லட்சத்து 16 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள், 6 லட்சத்து 14 ஆயிரம் பேர் 85 வயதுக்கு மேற்பட்டோராகவும் உள்ளனர்.

இத்தேர்தல் பணியில் 3 லட்சத்து 32 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்தல் பணிகள் மற்றும் வேட்பாளர்களின் பிரச்சாரங்களை 39 பொது பார்வையாளர்கள், 20 காவல் பார்வையாளர்கள், 58 செலவின பார்வையாளர்கள் கண்காணித்து வந்தனர்.

தமிழகம் முழுவதும் 39 தொகுதிகளிலும் நேற்று முன்தினம் காலை 7 முதல் மாலை 6 மணி வரை 68 ஆயிரத்து 321 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் 69.46 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் முந்தைய மக்களவைத் தேர்தல்களில் 2014-ல் 73.74 சதவீதம், 2019-ல் 72.47 சதவீதம் என தொடர்ந்து சரிவடைந்து வந்த நிலையில், இந்த தேர்தலிலும் வாக்குப்பதிவு மேலும் சரிவடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த தேர்தலைவிட தற்போது 2.98 சதவீதம் வாக்குப்பதிவு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று முன்தினம் இரவு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ அறிவித்தபோது 72.09 சதவீதம் வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். தொகுதிகள் அளவில் சென்னையில் உள்ள 3 தொகுதிகள் மற்றும் கோவை உள்ளிட்ட தொகுதிகளில் அதிக அளவில் வாக்குகள் பதிவானதாக தெரிவித்திருந்தார். அன்று நள்ளிரவு 12 மணி அளவில் தேர்தல் ஆணைய தரவு பட்டியலை சத்யபிரத சாஹூ வெளியிட்டார். அதில் தமிழகம் முழுவதும் 69.46 சதவீதம் வாக்குகள் பதிவானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வட சென்னையில் 69.26 சதவீதம் வாக்குகள் பதிவானதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் வந்த பட்டியலில் 9.31 சதவீதம் குறைந்து, 60.13 சதவீதம் மட்டுமே பதிவானதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல் தென் சென்னையில் 67.82 சதவீதமாக இருந்தது, 13.55 சதவீதம் குறைந்து 54.27 சதவீதம் பதிவானதாகவும், மத்திய சென்னையில் 13.44 சதவீதம் குறைந்து 53.91 சதவீதம் வாக்குகள் பதிவானதாகவும் விவரங்கள் இடம்பெற்றிருந்தன.

கோவை தொகுதியிலும் முதலில் 71.17 சதவீதம் என அறிவிக்கப்பட்டு, பின்னர் 6.81 சதவீதம் குறைந்து 64.81 சதவீதம் பதிவானதாக குறிப்பிடப்பட்டது. இவ்வாறு முரண்பட்ட தகவல்களால், தேர்தல் அதிகாரிகள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சத்யபிரத சாஹூ அளித்த விளக்கம்: அனைத்து தொகுதிகளிலும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு விவரம் பெற முடியவில்லை. அதனால் தெரிவு செய்யப்பட்ட சில வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் அடிப்படையில் மாதிரி விவரம் தயாரிக்கப்பட்டு தோராய வாக்குப்பதிவு நிலவரம் அறிவிக்கப்பட்டது. மிக சரியான விவரம் நள்ளிரவு அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தேன்.

தற்போது வெளியிடப்பட்ட விவரங்கள் 19-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு வாக்கு எண்ணும் மையங்களில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் வழங்கப்பட்ட தரவுகள் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாக்குச்சாவடி வாரியாக தலைமை வாக்குச்சாவடி அலுவலர் அளித்த படிவத்தில் உள்ள விவரங்கள் அடிப்படையில் வாக்குப்பதிவு விவரம் பதிவு செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் பிறகு சட்டப்பேரவை தொகுதி வாரியாக பதிவான வாக்குகள் விவரம் வெளியிடப்படும். தற்போது வெளியாகியுள்ள விவரம் இறுதியானது இல்லை. மேற்கூறிய பணிகள் நிறைவடைந்த பிறகே முழுமையான விவரங்கள் வெளியிடப்படும். மறு வாக்குப்பதிவு நடத்த அனுமதி கோரி தேர்தல் ஆணையத்துக்கு எந்த பரிந்துரையும் அனுப்பப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

வாக்குப்பதிவு விவரங்கள் குளறுபடி தொடர்பாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "தேர்தல் ஆணைய தலைமை வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பிரத்தியேக செயலியில் பதிவிடப்பட்ட விவரங்கள் அடிப்படையில் மாநில அளவில் வாக்குப்பதிவு சதவீதம் அறிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய 2 தேர்தல்களில் இந்த நடைமுறை வெற்றிகரமாகவே இருந்துள்ளது. இந்த முறை சற்று வித்தியாசமாக தரவுகள் வந்துள்ளது. தற்போது தலைமை வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்கள் டைரியில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அடிப்படையில் வாக்குப்பதிவு சதவீதம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வாக்குப்பதிவு சதவீதம் சென்னையில் குறைந்துள்ளது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x