Published : 21 Apr 2024 04:00 AM
Last Updated : 21 Apr 2024 04:00 AM

தென்சென்னை 13-வது வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு கோரி தமிழிசை மனு

தேனாம்பேட்டை ஆஸ்டின் நகரில் உள்ள 13-வது வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்தக் கோரி, தேர்தல் நடத்தும் அலுவலர் அமித்திடம் தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று மனு அளித்தார். உடன், பாஜக பொறுப்பாளர் கரு.நாகராஜன், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர். படம்: எஸ்.சத்தியசீலன்

சென்னை: தென்சென்னை - மயிலாப்பூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட தேனாம்பேட்டை, ஆஸ்டின் நகரில் உள்ள 13-வது வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த பாஜக வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக, கிண்டியில் உள்ள தென்சென்னை தொகுதிதேர்தல் நடத்தும் அலுவலர் அமித்திடம் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் மனு அளித்தார். அத்தொகுதி பாஜக பொறுப்பாளர் கரு.நாகராஜன், பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் அப்போது உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் தமிழிசை கூறியதாவது: திமுகவுக்கு எப்போதெல்லாம் தோல்வி பயம் வருகிறதோ, அப்போது அவர்கள் மாற்றுப் பாதையை கடைபிடிப்பது வழக்கம். அந்த வகையில் மயிலாப்பூர் தொகுதியின் 122-வது வட்டத்தில் அமைந்துள்ள 13-வது வாக்குச் சாவடியில் 50 திமுகவினர் புகுந்து, முகவர்களை அடித்து வெளியேற்றிவிட்டு கள்ள ஓட்டுபோட முயற்சித்துள்ளனர். இதனால் அந்த வாக்குச் சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும். தி.நகர் 199, 200, 201, 202 ஆகியவாக்குச்சாவடிகளில் ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையம் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

வாக்குப் பதிவு குறைந்தது ஏன்?: வெள்ளிக் கிழமை, திங்கள் கிழமைகளில் தேர்தல் வைக்கின்றனர். அடுத்த 2 நாட்களுடன் சேர்த்து இதனை விடுமுறையாக மக்கள் எடுத்துக் கொள்கின்றனர். இதனால் வாக்கு சதவீதம் குறைந்துவிடுகிறது. புதன்கிழமை, வியாழக்கிழமைகளில் தேர்தல் வைத்தால் உபயோகமாக இருக்கும். கோடிக் கணக்கில் செலவு செய்து 100 சதவீத வாக்குக்கு விளம்பரம் செய்கின்றனர். ஆனால் அதனால் எந்த பயனும் இல்லை. இவற்றை தவிர்த்து மக்களுக்கான வாக்குகள் இருக்கிறதா என்பதை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x