Published : 20 Apr 2024 08:05 PM
Last Updated : 20 Apr 2024 08:05 PM
மேட்டூர்: மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் வாக்களிக்க ஆர்வத்துடன் வந்த வாக்காளர்கள், பெயர் பட்டியலில் பெயர் இல்லை என்று கூறியதால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
தருமபுரி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட, மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் 316 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன. இதில் 2,71,875 பேர் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு, நேற்று வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. முதல் முறை வாக்காளர்கள் முதல் பெரியவர்கள் வரை காலை முதல் ஆர்வத்துடன் வாக்குகளை செலுத்தினர். இந்நிலையில், மேட்டூர் தொகுதியில் பல வாக்குச்சாவடி மையங்களில் வாக்களிக்க அடையாள அட்டையுடன் சென்ற மக்கள் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
குறிப்பாக, மேட்டூர் அருகே லக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பெருமாள் கோவில் நத்தம் அரசு பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களார் அடையாள அட்டையுடன் சென்ற 40-க்கும் மேற்பட்ட மக்கள், பெயர் பட்டியலில் பெயர் இல்லை என கூறியதால், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
அதேபோல், சாம்பள்ளி அரசு பள்ளி வாக்குச்சாவடி மையத்திலும் வாக்களிக்க சென்ற 20-க்கும் மேற்பட்டோர் பட்டியலில் பெயர் இல்லை என கூறி அதிகாரிகள் வாக்களிக்க அனுமதிக்கவில்லை. இதேபோல், தொகுதியில் பல இடங்களில் இதுபோன்ற பிரச்சினைகள் நிலவியது. இதனால் வெளியூர்களில் இருந்து வாக்களிக்க வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இது குறித்து அவர்கள் கூறும்போது: “நாங்கள் பல வருடங்களாக இங்கயே தான் வசித்து வருகிறோம். வேலை காரணமாக, சில நாட்கள் வெளியே சென்று வருகிறோம். எங்கள் பிள்ளைகள் படிப்பு, வேலை காரணமாக வெளியூர்களில் தங்கியுள்ளனர். ஆனால், தேர்தல் நாளில் வாக்களிக்க தவறியது கிடையாது. மக்களவை தேர்தலில் வாக்களிக்க சென்ற போது, பட்டியலில் பெயர் இல்லை என கூறி வாக்களிக்க அனுமதிக்க வில்லை. வாக்காளர் விவரங்களை அதிகாரிகள் சரியாக பதிவு செய்யவில்லை.
மக்களவை, சட்டமன்றம், உள்ளாட்சி தேர்தல்கள் என அனைத்து தேர்தலிலும் தவறாமல் வாக்கு செலுத்திய நிலையில், முதல் முறையாக வாக்கு செலுத்த முடியாமல் விட்டது. வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் வாக்களிக்க முடியவில்லை. ஒரு சிலர் இறந்து விட்டதாகவும் பதிவு செய்துள்ளனர். ஒருவர் அந்த பகுதியில் வசித்து கொண்டு இருப்பது தெரிந்தும், எப்படி, பட்டியலில் இருந்து பெயரை நீக்கியுள்ளனர் என்பது தெரியவில்லை. அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து, விசாரித்துதான் வாக்காளர் பட்டியலை தயார் செய்தார்களா என்பதும் தெரியவில்லை” என்றனர் ஆதங்கத்துடன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT