Last Updated : 20 Apr, 2024 04:44 PM

 

Published : 20 Apr 2024 04:44 PM
Last Updated : 20 Apr 2024 04:44 PM

புதுச்சேரியில் 78.57% வாக்குப்பதிவு; வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் 739, காரைக்கால் - 164, மாஹே -31 ஏனாம் - 33 என மொத்தம் 967 வாக்குச்சாவடிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். ஆனாலும், ரெயின்போ நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானது. உடனே அந்த வாக்குச்சாவடிகளில் மாற்று இயந்திரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, வாக்குப்பதிவு நடந்தது. இதனால் அங்கெல்லாம் காலதாமதம் ஏற்பட்டது. புதுச்சேரியில் நேற்று ஒட்டுமொத்தமாக 78.57 சதவீதம் வாக்குகள் பதிவானது.

குறிப்பாக 12 சட்டப்பேரவை தொகுதிகளில் 80 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பதிவாகியுள்ளன. இதன்படி மண்ணாடிப்பட்டு-85.34, திருபுவனை-84.95, ஊசுடு-84.95, காலாப்பட்டு-81.42, நெல்லித்தோப்பு-80.74, அரியாங்குப்பம்-81.26, மணவெளி-82.65, ஏம்பலம்-85.4, நெட்டப்பாக்கம்-85.53, பாகூர்-88.53, நெடுங்காடு-80.39 சதவீதம் பதிவானது. குறைந்தபட்டமாக மாஹேவில் 65.11 சதவீதம் வாக்குகள் பாதிவாகியது.

இது கடந்த தேர்தலை காட்டிலும் 2.68 சதவீதம் குறைவாகும். வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு, வேட்பாளரின் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு வாகனங்கள் மூலம் போலீஸார் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினர் பாதுகாப்போடு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.

புதுச்சேரியில் லாஸ்பேட்டையில் உள்ள அரசு மகளிர் பொறியியல் கல்லாரி மற்றும் மோதிலால் நேரு தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள ஸ்டிராங் ரூமில் வாக்குப்பதிவு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அந்த அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டு சிஆர்பிஎப், ஐஆர்பிஎன் மற்றும் மாநில போலீஸார் என 3 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறைகள் உட்பட வாக்கு எண்ணிக்கை மையங்கள் முழுவதும் 24 மணி நேரமும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவு குறித்த சீராய்வுக் கூட்டம் தேர்தல் பொதுப் பார்வையாளர் பியுஷ் சிங்லா மற்றும் புதுச்சேரி மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி குலோத்துங்கன் தலைமையில் வாக்கு எண்ணிக்கை மையங்களுள் ஒன்றான அரசு மகளிர் பொறியியல் கல்லூரியின் பயிலரங்குக் கூடத்தில் இன்று நடைபெற்றது.

வாக்குப்பதிவு குறித்து சீராய்வு செய்த பொதுப் பார்வையாளர் பியுஷ் சிங்லா, ''புதுச்சேரி மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியாகவும், சிறப்பாகவும் நடைபெற்றது. இது முழு திருப்தியைத் தருகிறது'' என்று தெரிவித்தார். பின்னர் பேசிய மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி குலோத்துங்கன், ''வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.

வேட்பாளர்கள் எந்தநேரமும் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வந்து பதிவேட்டில் கையெழுத்திட்டு அங்கு ஒளிபரப்பப்படும் சிசிடிவி கேமராக் காட்சிகளை நேரடியாக பார்த்துக் கொள்ளலாம். புதுச்சேரியில் வாக்குப்பதிவு சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய வேட்பாளர்கள், முகவர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார். இந்தக் கூட்டத்தில் மாவட்ட துணைத் தேர்தல் அதிகாரி வினயராஜ், உதவித் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் கலந்துகொண்டனர்.

புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வைத்திலிங்கம், பாஜக சார்பில் அமைச்சர் நமச்சிவாயம், அதிமுக சார்பில் தமிழ்வேந்தன் உள்பட மொத்தம் 26 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. அவை முடிந்த பின்னர் வரும் ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x