Published : 20 Apr 2024 04:41 AM
Last Updated : 20 Apr 2024 04:41 AM
சென்னை: தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏதுமின்றிமக்களவை தேர்தல் நேற்று அமைதியாக நடந்து முடிந்தது. தமிழகத்தில் 72.09 சதவீத வாக்குகள் பதிவாகின.
நாட்டின் 18-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக, தமிழகத்தின் 39 தொகுதிகள், புதுச்சேரி தொகுதி உட்பட நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலும் நேற்று நடந்தது.
தமிழகத்தின் 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இத்தேர்தலில், 3.06 கோடி ஆண்கள், 3.17 கோடி பெண்கள், 8,467 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 6.23 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இதில் 10.52 லட்சம் பேர் முதல்முறை வாக்காளர்கள் ஆவர். வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத் திறனாளிகள் எளிதாக வந்துவாக்களிக்கும் வகையில், அனைத்துவாக்குச்சாவடிகளிலும் சாய்தளம், சக்கர நாற்காலிகள், அதை இயக்க தன்னார்வலர்கள் மட்டுமின்றி, நிழற்பந்தல், குடிநீர், கழிப்பறை, குழந்தைகள் பாதுகாப்பு மையம் உள்ளிட்டஅடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. பதிவு அடிப்படையில், மாற்றுத் திறனாளிகள், முதியவர்களுக்கு அரசு சார்பில் போக்குவரத்து வசதியும் செய்து தரப்பட்டது.
190 கம்பெனி துணை ராணுவத்தினர், காவல் துறையினர், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற காவல் துறையினர், வெளி மாநில காவல் துறையினர், ஊர்க்காவல் படையினர் என 1.30லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பதற்றமான 8,050 மற்றும் மிக பதற்றமான 181 வாக்குச்சாவடிகளில் இணைய கேமரா, துணை ராணுவப் படையினர், நுண் பார்வையாளர் தேவைக்கேற்ப பயன்படுத்தப்பட்டனர். இதுதவிர, 44,801 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தி, ‘வெப் ஸ்ட்ரீமிங்’ முறையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்த கட்டுப்பாட்டு அறையில் இருந்து அதிகாரிகள் நேரலையாக கண்காணித்தனர். தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவும் நேரில் சென்று கண்காணித்தார்.
39 மக்களவை, விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த 68,321 வாக்குச்சாவடிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. முன்னதாக, அதிகாலை 5.30 மணிக்கே வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில், அதிகபட்சம் 50 வாக்குகள் வரை பதிவு செய்யப்பட்டு ஒத்திகை நடத்தப்பட்டது. பின்னர் அந்த வாக்குகள் அழிக்கப்பட்டு, விவிபாட் இயந்திரத்தில் பதிவானவாக்குகள் எடுத்து சரிபார்க்கப்பட்டு, தனியாக உறைகளில் பத்திரப்படுத்தப்பட்டன. பின்னர், இயந்திரம், சீலிடப்பட்டு, வாக்குப்பதிவுக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டது.
சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒருசில இடங்கள் உட்பட தமிழகத்தில் சுமார் 20 வாக்குச்சாவடிகளில் இயந்திரங்கள் பழுது ஏற்பட்டு, அவை சரிசெய்யப்பட்டன. இதனால், அரை மணி நேரம் வரை தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. சென்னை லயோலா கல்லூரியில் 2 மணி நேரம் தாமதமாக தொடங்கியது. அனைத்து இடங்களிலும் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிந்தது.
நேற்று வெப்ப அலை வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், காலை 6.30 மணி முதலே பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஜனநாயக கடமையாற்றினர்.
மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடியும் நேரத்தில், வரிசையில் காத்திருந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அவர்கள் அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால், சில வாக்குச்சாவடிகளில் இரவு 7.30 மணி வரை வாக்குப்பதிவு நீடித்தது.
வாக்குப்பதிவு முடிந்ததும், முகவர்கள் முன்னிலையில், பதிவான வாக்குகள், பதிவேட்டில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை சரிபார்க்கப்பட்டு, அதன்பின், மின்னணுஇயந்திரம் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக பெட்டியில் வைக்கப்பட்டது. பின்னர், வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, பாதுகாப்பு அறையில் (‘ஸ்டிராங் ரூம்’) வைக்கப்பட்டன.இங்கு துணை ராணுவம், உள்ளூர் போலீஸார், ஆயுதப் படையினர் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நேற்று இரவு 7 மணி நிலவரப்படி, தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் 72.09 சதவீதம், விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 64.54 சதவீதம் வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீதமும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 67.35 சதவீதமும் வாக்குகள் பதிவாகியிருந்தன.
இறுதி நிலவரம் இன்று தெரியவரும். அதிகப்படியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால், எவ்வித சட்டம் - ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாமல், தமிழகத்தில் தேர்தல் சுமுகமாக, அமைதியாக நடந்ததாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் 78.72 சதவீத வாக்குப்பதிவு: புதுச்சேரி மக்களவை தொகுதியில் நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவில் இரவு 10 மணி நிலவரப்படி, 78.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
புதுச்சேரி மக்களவை தொகுதியை பொருத்தவரை புதுச்சேரி 739, காரைக்கால் 164, ஏனாம் 33, மாஹே 31 என மொத்தம் 967 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. 10.23 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். பல வாக்குச்சாவடிகளில் இரவு வரை வாக்குப்பதிவு நடந்தது. இரவு 10 மணி நிலவரப்படி மொத்தம் 78.72 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வாக்குப்பதிவு முழுமையாக நடந்து முடிந்த பிறகு, இறுதி நிலவரம் தெரியவரும்.
வாக்குப்பதிவு நிறைவடைந்த வாக்குச்சாவடிகளில் முகவர்கள் முன்னிலையில் மின்னணு இயந்திரங்கள் சீலிடப்பட்டு, லாஸ்பேட்டை பகுதியில் உள்ள அரசு மகளிர் பொறியியல் கல்லூரி, மோதிலால் நேரு அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறைக்கு (ஸ்டிராங் ரூம்) கொண்டு சென்று வைக்கப்பட்டன.
102 தொகுதிகளில் தேர்தல் முடிந்தது: தமிழகம், புதுச்சேரி மட்டுமின்றி, ராஜஸ்தான் 12, உத்தர பிரதேசம் 8, மத்திய பிரதேசம் 6, மகாராஷ்டிரா, அசாம், உத்தராகண்ட் தலா 5, பிஹார் 4, மேற்கு வங்கம் 3, மணிப்பூர், மேகாலயா, அருணாச்சல பிரதேசம் தலா 2, சத்தீஸ்கர், காஷ்மீர், திரிபுரா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், லட்சத்தீவு, அந்தமானில் தலா ஒரு மக்களவை தொகுதி என நாடு முழுவதும் மொத்தம் 102 மக்களவை தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
மேற்கு வங்கத்தின் கூச் பெகர் பகுதி வாக்குச்சாவடியில் பணியில் இருந்த ஆயுதப் படை வீரர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். கூச் பெகர் தொகுதிக்கு உட்பட்ட துபான்கஞ்ச் பகுதி வாக்குச்சாவடியில் பாஜக - திரிணமூல் தொண்டர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர்.
குண்டுவெடிப்பில் வீரர் உயிரிழப்பு: சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட கல்காம் பகுதியில் வாக்குச்சாவடிக்கு 500 மீட்டர் தொலைவில் குண்டு வெடித்ததில் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் உயிரிழந்தார். பஸ்தர் தொகுதியின் சிக்கா பகுதியில் குண்டு வெடித்ததில் சிஆர்பிஎப் துணை கமாண்டர் படுகாயம் அடைந்தார். நாகாலாந்தின் குறிப்பிட்ட6 மாவட்டங்களை பிரித்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அந்த 6 மாவட்டங்களில் நேற்று ஒருவர்கூட வாக்களிக்கவில்லை.
முதல்கட்ட தேர்தலில் நேற்று மாலை 6 மணிநிலவரப்படி 63 சதவீத வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக திரிபுராவில் 80 சதவீத வாக்குகள் பதிவாகின. பிஹாரில் 48 சதவீத வாக்குகள் பதிவாகின. அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மாநில சட்டப்பேரவை தேர்தல் நேற்று அமைதியாக நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT