Published : 20 Apr 2024 09:17 AM
Last Updated : 20 Apr 2024 09:17 AM

வெவ்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தேர்தல் புறக்கணிப்பு

கோப்புப்படம்

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில், வெவ்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் அருகேயுள்ள பரந்தூரில் 2-வது விமான நிலைய விரிவாக்கத்துக்காக வேளாண் நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்ட ஏகனாபுரம், நாகப்பட்டு கிராம மக்கள் நேற்று தேர்தலைப் புறக்கணித்தனர். எனினும், ஏகனாபுரத்தில் 1,300 வாக்குகளில் 21 வாக்குகளும், நாகப்பட்டு பகுதியில் 245 வாக்குகளில் 41 வாக்குகளும் பதிவாகின.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சரவம்பாக்கம் கிராமம் அருகே தனியாருக்குச் சொந்தமான கல்குவாரிகளை மூடக் கோரி கிராமமக்கள் தேர்தலைப் புறக்கணித்தனர். எனினும், போலீஸாரின் பேச்சுவார்த்தைக்கு பிறகு வாக்களித்தனர்.

கீழ்வாசல், விளங்கனூரில் பட்டா கோரி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், குறைவான எண்ணிக்கையிலேயே வாக்குகள் பதிவாகின.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர்ஒன்றியத்துக்கு உட்பட்ட காட்டுப்பள்ளி கிராம மக்கள், வழக்குகளில் சம்பந்தப்பட்ட 9 பேரை தனியார் நிறுவனம் மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி தேர்தலைப் புறக்கணித்தனர். பொன்னேரி அருகேயுள்ள விடத்தண்டலம் கிராம மக்கள்சாலையை சீரமைக்க வலியுறுத்தியும், பெரியபாளையம் அருகே வடமதுரை ஊராட்சியினர், தங்கள்பகுதிகள் வருவாய்த் துறை ஆவணங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்தும் தேர்தலை புறக்கணித்தனர்.

அரக்கோணம் தொகுதிக்கு உட்பட்ட குமாரராஜபேட்டை மக்கள், கோயில்களை அகற்ற எதிர்ப்புத் தெரிவித்து தேர்தலைப் புற்கணித்தனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வாக்களித்தனர்.

மருந்து கழிவு தொழிற்சாலை: விழுப்புரம் அருகே வேடம்பட்டு கிராமத்தில் உள்ள தனியார் மருந்து கழிவுத் தொழிற்சாலையை மூடக் கோரி பொதுமக்கள் தேர்தலைப் புறக்கணித்தனர். அரியலூர் திருக்கை ஊராட்சியைச் சேர்ந்த கொண்டியங்குப்பம் கிராமத்தினர், கூடலூர் கிராமத்தில் வாக்குப்பதிவு மையம் அமைத்ததைக் கண்டித்து தேர்தலைப் புறக்கணித்தனர்.

இதேபோல, சித்தேரி கிராமத்தினர் தனி வாக்குப்பதிவு மையம் கோரி தேர்தலைப் புறக்கணித்தனர். எனினும், இரு கிராமத்தினரும் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வாக்களித்தனர்.

தூத்துக்குடியில்... தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி கிராமத்தினர் மீன் பதப்படுத்தும் ஆலைகளை அகற்றக் கோரி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்குச் சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை திருப்பி அனுப்பினர். இங்கு வாக்குச்சாவடி அலுவலர்கள் 20 பேர், பொதுமக்கள் 7 பேர் என 27 பேர் மட்டும் வாக்களித்தனர். தூத்துக்குடி ராஜீவ்நகர் மக்கள் மனைப்பட்டா கோரியும், அலவந்தான்குளம் கிராமத்தினர் குடிநீர் கோரியும் தேர்தலைப் புறக்கணித்தனர்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மோத்தக்கல் மற்றும் மருத்துவாம்பாடி கிராமங்களைச் சேர்ந்த பட்டியலின மக்கள் அடிப்படை வசதிகள் கோரி தேர்தலைப் புறக்கணித்துள்ளனர். சேத்துப்பட்டு அடுத்த செவரப்பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிழக்கு மேடு கிராமத்தினர், தங்களது ஊரில் வாக்குச்சாவடி அமைக்கக் கோரி தேர்தலைப் புறக்கணித்தனர்.

இதேபோல, தேனிமலையில் வசிக்கும் காட்டு நாயக்கன் சமுதாயத்தினர், பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் கோரிதேர்தலைப் புறக்கணித்னர். மேலும், திருவண்ணாமலை-தண்டராம்பட்டு சாலையில் மறியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை அதிகாரிகள் மற்றும் போலீஸார் சமாதானப்படுத்தினர்.

வேங்கைவயல் விவகாரம்: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளைக் கைதுசெய்யாததைக் கண்டித்து இறையூர் கிராமத்தினர் பெரும்பாலானோர் தேர்தலைப் புறக்கணித்தனர். கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். எனினும், வேங்கைவயல் கிராமத்தில் அதிகாரிகள் சமாதானத்துக்குப் பிறகு மாலையில் வாக்களித்தனர்.

நாமக்கல் மாவட்டம் வளையபட்டியில் சிப்காட் அமைக்கஎதிர்ப்புத் தெரிவித்தும், சேலம் மாவட்டம் ஏற்காடு செங்கலத்துப்பாடி மலைக் கிராமத்தில் மயானவசதி, கிருஷ்ணகிரி மாவட்டம்தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள பெட்டமுகிலாளத்தில் அடிப்படை வசதிகள், கருக்கனஹள்ளியில் தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்டப் பாலம் கோரியும் தேர்தலைப் புறக்கணித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x