Last Updated : 19 Apr, 2018 08:58 AM

 

Published : 19 Apr 2018 08:58 AM
Last Updated : 19 Apr 2018 08:58 AM

மதுரை காமராசர் பல்கலை.யின் 2 பேராசிரியர்களுக்கு தொடர்பு: 10 ஆண்டு கதையை ஒரே நாளில் சொல்ல முடியாது- பேராசிரியை நிர்மலாதேவி வாக்குமூலத்தால் மிரண்டுபோன போலீஸார்

‘10 ஆண்டு கதையை ஒரு நாளில் சொல்ல முடியாது’ என அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி அளித்த வாக்குமூலத்தால் காவல்துறை அதிகாரிகள் மிரண்டு போயினர். மேலும், இந்த விவகாரத்தில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மேலும் 2 பேராசிரியர்களுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி, கடந்த மாதம் மாணவியரை பாலியல்ரீதியாக தவறாக வழிகாட்டியதாக ஆடியோ அண்மையில் சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, அவர் அருப்புக்கோட்டை போலீஸாரால் கடந்த திங்கள்கிழமை கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் மகளிர் பிரிவில் அடைக்கப்பட்டார்.

முன்னதாக, அவரிடம் அருப்புக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமார் 2 மணி வரை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது, பேராசிரியை நிர்மலாதேவி அளித்த வாக்குமூலத்தில் ‘பத்தாண்டு கால கதையை ஒரே நாளில் சொல்ல முடியாது’ என்று கூறியதை கேட்டு காவல்துறை உயர் அதிகாரிகளே மிரண்டு போயினர்.

இதுகுறித்து, பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது: நிர்மலாதேவியின் பெற்றோரும் ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். இவர் அருப்புக்கோட்டையில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். தற்போது பணியாற்றும் கல்லூரியிலேயே இளநிலை மற்றும் முதுநிலை பட்டங்களை பெற்றுள்ளார்.

2008-ம் ஆண்டில் அருப்புக்கோட்டையில் உள்ள கல்லூரியில் உதவி பேராசிரியராக சேர்ந்தார். காமராசர் பல்கலைக்கழகத்துக்கு பல்வேறு பணிகளுக்காகச் சென்று வந்தபோது, குறிப்பாக தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் 2 பேராசிரியர்களுடன் இவருக்கு அலுவல்ரீதியிலான தொடர்பு ஏற்பட்டது.

பேராசிரியர்கள் தொடர்பு

கடந்த மாதம், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துக்கு பேராசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சிக்காக அவர் சென்றிருந்தார். அப்போது, தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் பணியாற்றும் குறிப்பிட்ட 2 பேராசிரியர்களின் தூண்டுதலின்பேரில் அருப்புக்கோட்டை கல்லூரியில் பயிலும் 5 மாணவிகளை அவர் செல்போனில் தொடர்புகொண்டு பாலியல்ரீதியாக தவறாக வழிகாட்டி வற்புறுத்தியதாக தெரிகிறது.

மேலும், உயர் கல்வித் துறையில் பல அதிகாரிகளுடனும் பேராசிரியை நிர்மலாதேவிக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது.

தற்போது இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதால், முதல் கட்ட விசாரணை மட்டும் முடிக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி இந்த வழக்கை எடுத்துக் கொண்டவுடன் இவ்வழக்கு விசாரணை மேலும் விரிவடையும். பேராசிரியை நிர்மலாதேவியிடம் முழுமையான விசாரணை நடத்தப்படும்.

கல்லூரி நிர்வாகிகள்

அதோடு, மதுரை காமராசர் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் பணியாற்றிவரும் குறிப்பிட்ட 2 பேராசிரியர்களும் விசாரணை வளையத்துக்குள் விரைவில் கொண்டு வரப்படுவர். அதோடு, குறிப்பிட்ட கல்லூரியில் இதற்கு முன் நிர்வாகப் பொறுப்பில் இருந்த சிலரும் சிக்குவார்கள். இவ்வாறு காவல்துறை அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x