Published : 11 Aug 2014 07:18 PM
Last Updated : 11 Aug 2014 07:18 PM

திருச்சியில் பாரம்பரிய உணவுப் பொருட்களை சுவைப்பதற்காக குவிந்த மக்கள்

பெரும்பாலும் லாபநோக்கில் தனியார் அமைப்புகள் மற்றும் உணவுப் பொருள் விற்பனைத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் நடத்தி வந்த பாரம்பரிய உணவுத் திருவிழாவை திருச்சியில் கலையரங்கம் வளாக திருமண மண்டபத்தில் தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்சித்திட்டத் துறை மிக பிரம்மாண்டமாக நடத்த செய்துள்ள ஏற்பாடுகள் அனைவரையும் கவர்ந்துள்ளது.

இந்த உணவுத் திருவிழாவுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருவதைப் பார்க்கும்போது மருந்தில்லா ஆரோக்கியமான வாழ்வுக்காக மக்கள் ஏங்குவது தெரிகிறது. எட்டு நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 34 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தனியார் மற்றும் அரசுத் துறை நிறுவனங்கள் பல இங்கு அரங்கு அமைத்துள்ளன.

இந்த உணவுத் திருவிழா ஆகஸ்ட் 16-ம் தேதிவரை 8 நாட்கள் நடைபெறவுள்ளது

வரகு பிரியாணி, சாமை தயிர் சாதம், திணை லட்டு, பாயசம், பொங்கல், குதிரைவாலி சாம்பார் சாதம், கம்பு அதிரசம், வரகு மற்றும் கேழ்வரகு முறுக்கு, கேழ்வரகு பீட்ஸா, பர்கர், சாமை இட்லி, சோளமுத்து பணியாரம், அப்பம், சாமை மாங்காய் சாதம், திணை கட்லெட், கொள்ளு காய்கறி சூப், வரகு மோர் கஞ்சி, திணை அரிசி பானகம், வரகு மோர் கஞ்சி என மலைக்க வைக்கும் விதவிதமான பாரம்பரிய உணவுப் பொருட்களை கூட்டம் கூட்டமாய் ருசி பார்த்தபடி அரங்குகளை மொய்க்கிறது மக்கள் கூட்டம்.

வெறும் உணவுப் பொருட்கள் அரங்குகள் மட்டுமில்லாமல் உணவுப் பொருட்களில் செய்யப்படும் கலப்படப் பொருட்களைக் கண்டுபிடிப்பது எப்படி? கலப்படத்தின் தீமைகள் என்ன? என்பதை விளக்க உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை பிரிவு அரங்கம் அமைத்து மக்களுக்கு கையேடு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

தோட்டக்கலைத் துறையினர் மற்றும் வேளாண்மைத் துறையினர் சிறுதானிய விதை மற்றும் தானியங்களை விற்பனைக்கு வைத்துள்ளனர். அவற்றை பயிரிடுவதற்கான ஆலோசனையும் இங்கு இலவசமாக கிடைக்கிறது.

சிறைத் துறையினர் கைதிகளைக் கொண்டு தயாரிக்கும் இனிப்பு, கார வகைகள், கோதுமை ரொட்டி, கேழ்வரகு பிஸ்கட்டுகள் என பலவிதமான திண்பண்டங்களை அடுக்கி விற்பனை செய்து வருகின்றனர். சிறுதானியங்களை மறந்து போனதால் ஆரோக்கியத்தை இழந்து விட்டோம். இனியாவது இவற்றை உணவாகப் பயன்படுத்த முயற்சி செய்து நோயற்ற வாழ்வு வாழ வேண்டும் என்கிற நோக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த உணவுத் திருவிழாவை நிச்சயம் பாராட்டலாம்.

தமிழக அரசு, பள்ளிகளில் மாணவர்களுக்கு தினமும் வழங்கும் மதிய நேர சத்துணவை வாரம் ஒரு தினம் பாரம்பரிய உணவுவகைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் பாரம்பரிய உணவுப் பழக்கத்தை ஏழைக் குழந்தைகளுக்கும் அறிமுகம் செய்ய முடியும் என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x