Published : 19 Apr 2024 03:38 PM
Last Updated : 19 Apr 2024 03:38 PM

“எங்களுள் உள்ளவர்கள் திருந்த ஒரு வாய்ப்பு” - வாக்களித்த பின்பு சசிகலா நம்பிக்கை

சென்னை: "ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, எங்களுள் உள்ளவர்கள் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு" என்று வாக்களித்த பிறகு வி.கே.சசிகலா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கியது. முற்பகல் 1 மணி நிலவரப்படி, தமிழகத்தில் 40.05 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்தார் அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா. வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய வி.கே.சசிகலா, "ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வந்த பிறகு எங்களுள் உள்ளவர்கள் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு. திருந்துவதற்கான வாய்ப்பாக இந்த தேர்தல் அமையும். அவர்கள் போட்ட ஒரு தப்புக் கணக்குக்கு ஒரு முடிவு வரும். அதனால் வரும் 2026-ம் ஆண்டு தேர்தல் எங்களின் காலமாக அமையும்" என்று தெரிவித்தார்.

தற்போது அதிமுக மூன்றாக உடைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் அதிமுக இரட்டை இலை சின்னத்துடன் உள்ளது. அதேநேரம் அதிமுக உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் அதிமுகவில் வெளியேற்றப்பட்ட ஒபிஎஸ் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தேனி தொகுதியில் போட்டியிடுகின்றார். இந்த நிலையில், சசிகலா திருந்துவதற்கு வாய்ப்பு என்று பேசியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x