Published : 19 Apr 2024 12:13 PM
Last Updated : 19 Apr 2024 12:13 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் காலை 11 மணிக்கு 28.1 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது. முதல்வர் ரங்கசாமி இருசக்கர வாகனத்தில் வந்து வாக்களித்தார்.
புதுச்சேரி மக்களவைத் தொகுதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ( 19.04.2024 ) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த இரு நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்ததால் காலையிலேயே பல பகுதிகளில் வாக்களிக்க மக்கள் வந்தனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நீண்ட வரிசையில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். முதல்வர் ரங்கசாமி தனது வீட்டு அருகில் உள்ள திலாஸ் பேட்டை அரசு ஆண்கள் நடுநிலைப் பள்ளியில் தனது வாக்கை இருசக்கர வாகனத்தில் வந்து பதிவு செய்தார்.
வாக்களித்த பின்பு முதல்வர் ரங்கசாமி கூறுகையில், “தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும்..எங்களது அரசு எல்லா திட்டங்களை செயல்படுத்துவதற்கான அங்கீகாரமாக தான் மக்கள் அதிக அளவில் வாக்களித்து வருகின்றனர்” என்றார்.
இந்திரா நகர் தொகுதிக்கு உட்பட்ட அன்னை தெரசா சுகாதார அறிவியல் மற்றும் பட்ட மேற்படிப்பு நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிக்கு தலைமைச் செயலர் சரத் சௌகான், தலைமைத் தேர்தல் அதிகாரி ஜவஹர், தேர்தல் நடத்தும் அதிகாரியும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான குலோத்துங்கன். உள்ளிட்டோர் இன்று காலை சென்று தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து பசுமைத் தேர்தலின் ஒரு பகுதியாக அங்கு அவர்கள் மரக்கன்றுளை நட்டனர். அதேபோல் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் உள்ளிட்டோரும் வாக்களித்தனர்.
இயந்திரங்கள் பழுது: புதுச்சேரி அடுத்த வில்லியனூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சுல்தான்பேட்டை மவுனியா மண்டபத்தில் வாக்குப் பதிவு மையம் வைக்கப்பட்டுள்ளது காலை மின்னணு இயந்திரம் வேலை செய்யாத காரணமாக வேறொரு மின்னணு இயந்திரம் வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து எட்டு முப்பது மணிக்கு மீண்டும் மின்னணு இயந்திரம் பழுதாகி உள்ளது. அதனையும் அதிகாரிகள் ஆய்வு செய்து சரி செய்த நிலையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இருப்பினும், மின்னணு இயந்திரம் பழுதாகியுள்ளது. இதனால் அங்கு இருக்கும் கட்சியின் ஏஜெண்டுகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து மின்னணு இயந்திரம் ஏன் பழுதாகின்றது என அதிகாரியிடம் கேட்டபோது சரியான முறையில் பதில் அளிக்காததால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டு கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அரை மணி நேரத்துக்கு பிறகு மீண்டும் வேறொரு மின்னணு இயந்திரம் வைக்கப்பட்டு, வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
புதுச்சேரியில் முதலியார்பேட், நைனார் மண்டபம் பகுதிகளில் விவி பேட் பழுதால் ஒரு மணி நேரம் வாக்குப் பதிவில் தாமதம் ஏற்பட்டது. புதுச்சேரியில் காலை 11 மணி நிலவரப்படி 28.1 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT