Last Updated : 19 Apr, 2024 08:27 AM

1  

Published : 19 Apr 2024 08:27 AM
Last Updated : 19 Apr 2024 08:27 AM

இறையூர், வேங்கைவயல் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு - வெறிச்சோடிய வாக்குச்சாவடி

படவிளக்கம்: புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்களிக்க யாரும் வராததால் வெறிச்சோடிக் காணப்படும் வேங்கைவயல் அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி.

புதுக்கோட்டை: தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அங்குள்ள இறையூர் மற்றும் வேங்கைவயல் கிராம மக்கள் வாக்களிக்கக்கூடிய வாக்குச்சாவடியில் இதுவரை யாரும் வாக்களிக்காததால் வாக்குச்சாவடி வெறிச்சோடிக் காணப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கடந்த 2022-ல் மனிதக் கழிவு கலக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் நேரடி சாட்சி யாரும் இல்லாததால் அறிவியல் ரீதியான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மனிதக் கழிவு மாதிரியிலிருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏவும், சந்தேகத்தின் பேரில் 30-க்கும் மேற்பட்டோரிடமிருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏவும் ஒத்துப்போகவில்லை என்பதால் முதற்கட்ட முயற்சியில் குற்றவாளிகள் யாரென கண்டறிய முடியவில்லை. இதைத்தொடர்ந்து, அடுத்த கட்டமாக குரல் மாதிரி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 2 பேரிடம் குரல் மாதிரி சோதனை நடத்தப்பட்டுள்ளது. மேலும் 3 பேருக்கு நடத்துவதற்கான பணி நடைபெற்று வருகிறது.

இதுவரையில் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது யார் எனக் கண்டறியப்படவில்லை. இதனால் இந்த பிரச்சினையானது இரு வேறு சமூகங்களுக்கு இடையேயான பிரச்சினையாக மாறியது. மனிதக் கழிவை கலந்தவர்கள் யாரென விரைவாக கண்டறிய வேண்டும் என வலியுறுத்தி வேங்கைவயல் மற்றும் இறையூர் மக்கள் தனித்தனியாக போராட்டங்களிலும் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், குற்றவாளிகளை கண்டறிந்து விரைவாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சமயத்தில் இறையூர் பகுதி மக்கள் ஊருக்குள் மட்டுமின்றி மற்ற இடங்களிலும் பிளக்ஸ் பேனரை வைத்திருந்தனர். அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டதாகக் கூறி வெள்ளனூர் போலீஸார் மற்றும் வருவாய் துறையினர் பேனர்களை கைப்பற்றிச் சென்று விட்டனர். இதைத்தொடர்ந்து குடிநீர் தொட்டி அமைந்துள்ள இடத்தில் வேங்கைவயல் மக்கள் அதே கோரிக்கையை வலியுறுத்தி பிளக்ஸ் பேனரை வைத்து தேர்தல் புறக்கணிப்பை சமீபத்தில் அறிவித்தனர்.

இந்நிலையில், இறையூர் மற்றும் வேங்கைவயல் கிாரம மக்கள் வாக்களிக்கக்கூடிய வாக்குச்சாவடியில் இதுவரை யாரும் வாக்களிக்காததால் வாக்குச்சாவடி வெறிச்சோடிக் காணப்படுகிறது. திருச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட இந்த வாக்குச்சாவடியை பதற்றமான வாக்குச் சாவடியாக கணக்கில் கொண்டு, நுண்பார்வையாளர் மூலம் கண்காணிப்பு, துணை ராணுவம் மூலம் பாதுகாப்பு என பலத்த பாதுகாப்பு வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. சுமார் 549 வாக்காளர்கள் வாக்களிக்கக்கூடிய இந்த வாக்குச்சாவடியில் காலை வரையில் வேங்கைவயல் மற்றும் இறையூர் மக்கள் யாரும் வாக்களிக்கவில்லை. இதனால் வாக்குச்சாவடி வெறிச்சோடிக் காணப்படுகிறது. எனினும், தொடர்ந்து தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக இரு கிராமங்களைச் சேர்ந்தோரும் அறிவித்து உள்ளனர்.

இதுதொடர்பாக, வருவாய்த் துறை அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, “முத்துக்காடு கிராமத்தில் இருந்து ஒரு வாக்கு மட்டும் இடிசி மூலம் அந்த வாக்குச்சாவடியில் பதிவாகி உள்ளது. மற்றபடி வேங்கைவயல் மற்றும் இறையூர் கிராமங்களைச் சேர்ந்தோர் வாக்களிக்கவில்லை. எனினும், இரு கிராமங்களைச் சேர்ந்தோரிடமும் பேசி, அனைவரையும் மாலைக்குள் வாக்களிக்க நடநடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x