Published : 19 Apr 2024 05:11 AM
Last Updated : 19 Apr 2024 05:11 AM
சென்னை: மக்கள் மின்னணு இயந்திரத்தில் வாக்களிப்பதால், தேர்தல் நாளான இன்று வாக்குச்சாவடிகளில் திமுக முகவர்கள் மிகுந்த கவனத்துடன் பணியாற்ற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறி யிருப்பதாவது:
இந்தியாவின் 18-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், முதல்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தின் 39 மற்றும் புதுச்சேரியின் ஒருமக்களவை தொகுதி உள்ளிட்ட 102 தொகுதிகளில் நடைபெறுகிறது.
தேர்தல் பணி: மக்களவைத் தேர்தல் அறிவித்த நாளில் இருந்து, நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கி பணியைமேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த காலஅவகாசத்துக்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, தேர்தல் பணியில்திமுகவினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை நிரூபித்துள்ளீர்கள்.
மார்ச் 22-ம் தேதி திருச்சியில் எழுச்சியாகத் தொடங்கிய என் பரப்புரை பயணம், ஏப்.17-ம் தேதிதென்சென்னை, மத்திய சென்னை தொகுதிகளில் நிறைவடைந்துள் ளது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக்கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப் படும் என்பதில் உறுதியுடன் இருக் கிறேன்.
அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்.19-ம் தேதி (இன்று) திமுகவினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன்தரும்.
திமுக தொண்டர்களின் கடமை: தமிழகத்தில் ‘இண்டியா’ கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்ய வேண்டிய கடமைதிமுக தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடிமுகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள்; முழுமையான போர் வீரர்கள்.
இதில், வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும். மின்னணு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறையஉள்ளன. அவை சட்டத்துறை சார்பில் கையேடாக வழங்கப்பட் டுள்ளது.
முழு வெற்றி உறுதியாகும்: அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்டகட்சியின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதிசெய்ய வேண்டும். வாக்குப்பதிவில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாகஅமைந்தால்தான் திமுக கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும்.
விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT