Published : 19 Apr 2024 05:30 AM
Last Updated : 19 Apr 2024 05:30 AM

பாஜக ஆட்சியை அகற்ற மக்கள் முடிவெடுக்கும் நேரம் வந்துவிட்டது: செல்வப்பெருந்தகை விமர்சனம்

சென்னை: பாஜக ஆட்சியை அகற்ற மக்கள் முடிவெடுக்கும் நேரம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாட்டில் இதுவரை நடைபெற்ற மக்களவை தேர்தல்களிலேயே மிகமிக முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இந்த மக்களவைத் தேர்தல் அமைந்திருக்கிறது. இது இந்தியாவின் எதிர்காலத்தையும், நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தையும் நிர்ணயிக்கப் போகும் தேர்தலாகும்.

இந்தியாவில் ஜனநாயகம் நீடிக்கப் போகிறதா? சர்வாதிகாரம் நீடிக்கப் போகிறதா? என்பது குறித்து வாக்காளப் பெருமக்கள் முடிவு செய்ய வேண்டிய தேர்தல்.

கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் 2014, 2019 ஆகிய தேர்தல்களில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. மக்கள் விரோத நடவடிக்கைகளின் காரணமாக பாஜக ஆட்சியை அகற்ற மக்கள் முடிவெடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.

இந்தியா முழுவதும் பாஜக எதிர்ப்பு அலை வீசிக் கொண்டிருக்கிறது. வடமாநிலங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது என்ற நிலையில் 9 முறை தமிழகத்தில் தேர்தல் பரப்புரை நிகழ்த்த வேண்டிய பலவீனமான நிலையில் பிரதமர் மோடி இருக்கிறார்.

ஆனால், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத அளவுக்கு மோடி எதிர்ப்பு அலை உருவாகியிருக்கிறது. தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதி மறுக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடராக கருத முடியாது என்று மத்திய நிதியமைச்சர் அறிவித்ததை எவரும் மறக்க முடியாது. தொடர்ந்து தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகிறது.

அதேநேரம், அகில இந்திய காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் மக்கள் நலன் சார்ந்த வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

எனவே, மக்கள் நலன்சார்ந்த நல்லாட்சி அமைந்திட காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் மக்கள் நலன் சார்ந்த வாக்குறுதிகள் வழங்கப்பட்டு உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x