Last Updated : 11 Apr, 2018 08:09 AM

 

Published : 11 Apr 2018 08:09 AM
Last Updated : 11 Apr 2018 08:09 AM

ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்குவதில் நெருக்கடி: சுற்றுச்சூழல் அனுமதியை புதுப்பிக்க மறுப்பு; நிபந்தனைகளை நிறைவேற்றாததால் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை தொடர்ந்து இயங்குவதற்கு, சுற்றுச்சூழல் அனுமதிக்கான உரிமம் புதுப்பிப்பு விண்ணப்பத்தை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்துள்ளது. இதனால் ஆலையை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் வேதாந்தா குழுமத்தின் ஒரு அங்கமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் 4 லட்சம் டன் தாமிரம் கூடுதலாக உற்பத்தி செய்வதற்காக, ஆலையை விரிவாக்கம் செய்யும் பணிகளை, ஸ்டெர்லைட் நிறுவனம் தொடங்கியது. இதற்கு தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஸ்டெர்லைட் ஆலை அருகேயுள்ள அ.குமரெட்டியாபுரம் மக்களின் போராட்டம் நேற்று 58-வது நாளாக தொடர்ந்தது. அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு கிராமங்களிலும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையைத் தொடர்ந்து இயக்குவதற்கான உரிமத்தை புதுப்பிக்க கோரும் விண்ணப்பத்தை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்துள்ளது. இந்த ஆலையை தொடர்ந்து இயக்க, ஆண்டுதோறும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் அளிக்கப்படும் உரிமம், மார்ச் 31-ம் தேதியோடு காலாவதியாகும். ஏப்.1-ம் தேதி முதல் ஆலையை தொடர்ந்து இயக்க, உரிமத்தை புதுப்பிக்க வேண்டியது அவசியம்.

அவ்வாறு ஸ்டெர்லைட் ஆலைக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட உரிமம், கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து உரிமத்தை புதுப்பிக்க ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் விண்ணப்பிக்கப்பட்டது. இந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், 9.4.2018-ல் வெளியிட்ட குறிப்பாணை மூலம், ஸ்டெர்லைட் நிறுவனத்தின் விண்ணப்பத்தை நிராகரிப்பதாக தெரிவித்துள்ளது.

வாரியத்தின் சில நிபந்தனைகளை ஸ்டெர்லைட் நிறுவனம் சரிவர நிறைவேற்றாததால், விண்ணப்பத்தை நிராகரிப்பதாக அந்த குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், என்ன நிபந்தனைகள் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.

ஆலை நிறுத்தம்

ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை ஏற்கெனவே கடந்த மாதம் 26-ம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பராமரிப்புப் பணிகளுக்காக ஆலை 15 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக ஆலை தரப்பில் கூறப்பட்டது. ஆலை நேற்று (ஏப்.10) மீண்டும் செயல்பட தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், செயல்படவில்லை. உரிமத்தை புதுப்பிக்க கோரும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதால் ஆலையை மீண்டும் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆலை நிர்வாகம் விளக்கம்

இதுதொடர்பாக ஆலை தரப்பில் கேட்டபோது, “குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு விரைவில் புதிதாக விண்ணப்பித்து உரிமம் பெறப்படும். 15 நாட்கள் பராமரிப்புப் பணிகள் என்று கூறினாலும், பணிகள் முழுமையாக முடிய மேலும் சில நாட்கள் ஆவது வழக்கம். தற்போது உரிமத்தை புதுப்பிக்க கோரும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதால் பராமரிப்புப் பணிகள் தொடர்ந்து மேலும் சில நாட்கள் நடைபெறும்” என்றனர்.

இதற்கிடையே மாசுக்கட்டுப்பாட்டு முடிவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சமக தலைவர் சரத்குமார் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

257 பேர் மீது வழக்கு

ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி 10 கிராமங்களை சேர்ந்த மக்கள், நேற்றுமுன்தினம் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது ஒரு பகுதியினர் தூத்துக்குடி- திருநெல்வேலி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 257 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x